×

மழைநீரால் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு  வழங்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் இன்னும் வடியாததால் சென்னை மாநகரம் தீவு போல் காட்சியளிக்கிறது. காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தேங்கியிருக்கும் மழை நீரால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுவதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்றுகளும் வேகமாக பரவி வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத குழாய்கள் மூலம் அகற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரால் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும். மெயின் ரோட்டில் மெட்ரோ ரயிலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தாலும், தெருக்களில் மழை நீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்துள்ளதாலும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகள் சீரமைக்கவும், மழை நீரை வெளியேற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vijayakanth , Compensation should also be given to farmers who have lost their crops due to rain water: Vijayakanth's demand
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...