×

700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியானதை அடுத்து ஒன்றிய அரசின் வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!

டெல்லி: வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து குளிர்காலக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், மன்னிப்பு கேட்டார். அதன்படி திங்கள்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை ஒன்றிய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிமுகம் செய்தாா்.

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மீது நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனா். இரு அவைகளும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாவிற்கு இன்று அவர் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட நிலையை அடைந்துள்ளது.

Tags : President , Farmers, Agriculture Law Repeal Bill, President, Approved
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...