×

பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரை எதிர்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்த நிலையில், வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எதிர்கட்சி எம்பிக்கள் மீதான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் காந்தி சிலை முன் போராட்டம் நடந்தது. அப்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் மீதான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி சக்திசிங் கோஹில் சார்பில், உணவு தானியங்கள், எண்ணெய், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், கொரோனா இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை குறித்து விவாதம் நடத்தவும், தொற்றுநோயால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சில எம்பிக்கள் நோட்டீஸ் அளித்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் கேள்வி நேரத்துக்கு இடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எதிர்கட்சி எம்பிக்கள் மீதான உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி  காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, ‘விவசாயிகள் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வேளாண் அமைச்சகம் தரப்பட்ட பதிலில், ‘விவசாயிகள் இறப்பு விஷயம் ெதாடர்பாக எவ்வித பதிவும் ஒன்றிய அரசிடம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அதனால், அவை நடவடிக்கையை பிற்பகல் 12 மணி வரை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் மக்களவை, மாநிலங்களவை விவாதங்கள் நடந்தன.

சாக்லெட் வழங்கிய நடிகை எம்பி
* நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா எம்பியும், நடிகையுமான ஜெயா பச்சன், போராட்டம் நடத்திய எம்பிக்களுக்கு சாக்லெட், மாம்பழ ஜூஸ் பாக்கெட்டுகளை வழங்கினர். அப்போது அவர் கூறுகையில், ‘எனர்ஜியுடன் இருந்தால் தான் போராட்டத்தை நன்றாக நடத்த முடியும்’ என்றார்.
* நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘காந்தி சிலை முன் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது; அவையில் தகாத முறையில் நடந்து கொண்ட 12 எம்பிக்களும் குறைந்தபட்சம் வருத்தம் தெரிவிக்க வேண்டுகிறேன். நாங்கள் அவையை நடத்த விரும்புகிறோம். எதிர்க்கட்சி அணுகுமுறை என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றார்.
* மங்கோலியா நாட்டின் நாடாளுமன்ற தலைவர் தலைமையிலான 23 உறுப்பினர்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளது. அவர்கள், இன்று நடந்த நாடாளுமன்ற மக்களவை நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டனர். முன்னதாக அவர்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார்.


Tags : Barley ,Union Government , Parliament, Oppositions, Voyage
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...