சென்னை கோயம்பேட்டில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது!: செல்போன் சிக்னலில் சிக்கினார்..!!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது செய்யப்பட்டார். சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில்  ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்த தமிழ்ச்செல்வன், ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பிற மாணவர்களிடையே இது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம், காவல்துறையினர் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகமானது ஆங்கில பேராசிரியர் தமிழ்ச்செல்வனை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும் பேராசிரியர் கைது செய்யப்படாததை கண்டித்து இன்றும் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாநகர் துணை ஆணையர் தீபா சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், போரூர் அருகே பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மறைந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

More