×

நீட் போன்ற தேர்வுகளால் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு ஏதேனும் செய்ததா?: மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி..!!

டெல்லி: நீட் போன்ற தேர்வுகளால் பின்தங்கிய பிரிவினருக்கு எவ்வித பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா என நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழுத் தலைவருமான டி.ஆர் பாலு எம்.பி., மக்களவையில் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அதில், மருத்துவப் படிப்புக்கான அனைத்து இந்தியப் போட்டித் தேர்வு போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் காரணமாக சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் எவ்வகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வு எதனையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரம் என்ன? அத்தகைய ஆய்வேதும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன? அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்திடவும் ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் விரிவான வினாவினை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரப் பங்களித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக், நீட்  உள்ளிட்ட  அனைத்திந்திய போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்று மக்களவையில் தெரிவித்தார். எனினும், மிக அண்மையில் கடந்த ஆகஸ்ட் 2021 முதல், மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய கோட்டாவில், நீட் தேர்வில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்றும் தனது பதிலில் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பு சட்டம்  பிரிவு 338  பி (5) ன் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், பின்தங்கிய வகுப்பு மக்களின் உரிமைகளை பாதுகாத்து உறுதி செய்திட உரிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுமானால்  இந்த  ஆணையத்தை அணுகிப் புகார் அளிக்கலாம் என்றும் அத்தகைய புகார்களை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

Tags : Union Government ,Neet ,D.C. R. ,Palu , NEET EXAMINATION, UNITED GOVERNMENT, LOCATION, DR BALU
× RELATED பிஎச்.டி. படிப்புக்கும் தேசிய நுழைவுத்...