கட்சியின் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்!: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிரடியாக நீக்கம்..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவருமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, பேச முயன்ற போது அண்மையில் அவர் பழனிசாமியை ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவை சுட்டிக்காட்டி அவருக்கு பேச வாய்ப்பு வழங்கக்கூடாது என ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், அன்வர் ராஜாவுக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அவருடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2001 சட்டப்பேரவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வர் ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவராகவும் இருந்த அன்வர் ராஜாவை, அதிமுக அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

Related Stories: