மார்பிங் செய்யப்பட்டு மலையாள நடிகையின் ஆபாச படம் சமூக வலைத்தளத்தில் வெளியீடு: குமரியை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையின் மார்பிங் செய்த ஆபாச படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட குமரி வாலிபர் உள்பட 2 பேரை திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மலையாள படவுலகில் முன்னணி நடிகையான ஒருவர் தற்போது தமிழ் டி.வி சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் ஆபாச புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதுகுறித்து அந்த நடிகை கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாமிடம் புகார் அளித்தார். அவர் இதுதொடர்பாக விசாரிக்க, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் ஒரு தனிப்படைக்கு உத்தரவிட்டார்.

இந்த தனிப்படையில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் சியாம் லால், இன்ஸ்பெக்டர் பிரதாப்,  சப்-இன்ஸ்பெக்டர் மனு உள்பட போலீசார் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நடத்திய விசாரணையில், நடிகையின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போலி ஐடி உருவாக்கி வெளியிட்டது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில், ஆபாச படங்களை மார்பிங் முறையில் உருவாக்கி வெளியிட்டது குமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சங்கர் மற்றும் பாக்கியராஜ் (22) என்று தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் சங்கரை நாகர்கோயிலில் வைத்து கைது செய்தனர். பாக்கியராஜ் டெல்லி சாகர்பூர் பகுதியில் தங்கியிருந்தார்.

இதையடுத்து அவரை டெல்லி சென்று கேரள போலீசார் கைது செய்தனர். இருவரையும் நேற்று திருவனந்தபுரம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை கூறுகையில், ‘என்னுடைய படங்களை மார்பிங் முறையில் ஆபாச படங்களாக மாற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஆசாமிகளை கைது செய்ததால் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா துறையிலுள்ள பல்வேறு நடிகைகளுக்கு எதிராக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், பெரும்பாலானோர் போலீசில் புகார் செய்யாததால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு ஊக்கமாக அமைந்துவிடுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட நடிகைகள் இதுதொடர்பாக புகார் அளிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

More