ஒன்றிய அரசிடம் புகார் அளிப்போம் இரவில் நீர் திறந்ததால் மக்கள் அவதி: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இரவில் திடீரென தண்ணீர் திறந்து விட்டது பற்றி ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் புகார் செய்யப்படும்,’ என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறினார்.

இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், திடீரென நள்ளிரவு நேரத்தில் திறக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இரவில் தண்ணீர் திறந்து விட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். இது தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் மற்றும் முல்லை பெரியாறு மேற்பார்வைக் குழு தலைவரிடம் புகார் செய்யப்படும். இது குறித்து தமிழக அரசிடமும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

* ‘தண்ணீர் வெடிகுண்டு’

இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டத்தில் நேற்று நடந்த விவசாயிகள் பாதுகாப்பு அமைப்பின் போராட்டத்தில்  கேரள முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமான எம்.எம்.மணி பேசுகையில், ‘‘முல்லை பெரியாறு அணையின் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு மேல் கம்பியையும், சிமென்டையும் வைத்து பூசினால் எப்படி உறுதியாக இருக்கும்? ஒரு தண்ணீர் வெடிகுண்டு போல் இந்த அணை நிற்கிறது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்,’’ என்றார்.

Related Stories: