ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக் குழு நாங்கள்தான் தேர்வு செய்வோம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: ‘ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கும் போது அதில் இடம் பெறுபவர்களை நாங்களே தேர்ந்தெடுப்போம்,’ என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடந்த வாதங்கள் வருமாறு: மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் (அப்போலோ மருத்துவமனை): ஜெயலலிதா மரண பற்றிய அனைத்து உண்மைகளும் மக்களுக்கு தெரிய வேண்டும். அதனால், விசாரணையை நீட்டித்து கொண்டிருக்காமல் விரைவாக முடிக்க வேண்டும். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ஜோசப் அரிஸ்டாட்டில்

(தமிழக அரசு): சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யும் அப்போலோவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஆணையத்தின் விசாரணை 95 சதவீதம் முடிந்து விட்டது. இப்போது குறுக்கு விசாரணை நடத்துவது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இது விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியாகும். அதனால், மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். ஆணையத்தின் விசாரணைக்கு 700 சதுரடி கொண்ட புதிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆணையத்துக்கு உதவுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டால், குழுவில் இடம் பெறும் மருத்துவர்களை தமிழக அரசு தான் தேர்வு செய்யும்.

மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் (ஆறுமுகசாமி ஆணையம்): விசாரணையின் போது அனைத்து தரப்பும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்று விசாரணையை இழுத்தடிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த ஆணையத்துக்கு தமிழக அரசு இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். தற்போது செய்துள்ள வசதிகள் திருப்தியாக இல்லை. உணவு மேஜை அமைத்து கொடுத்திருக்கிறீர்கள். அது மட்டுமே போதுமானதல்ல. ஆணையத்தின் விசாரணை அறை, நீதிமன்ற அறைக்கு இணையாக இருக்க வேண்டும். சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என அப்போலோ மருத்துவமனையின்  கோரிக்கையை ஏற்கிறோம். ஒட்டு மொத்தமாக என்று இல்லாமல், எந்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை முன்கூட்டியே நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். ஆணையத்துக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் மருத்துவக் குழுவில் இடம் பெறுபவர்களை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநரே மேற்கொள்வார். அது குறித்த பரிந்துரைகளை வேண்டுமானால் தமிழக அரசு கொடுக்கலாம். இந்த வழக்கில் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவக் குழு அமைப்பது, அனைத்து தரப்பும் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது.

Related Stories: