×

இனிமேல் காத்திருக்க முடியாது விஜய் மல்லையா வழக்கில் ஜன.18 தேதி இறுதி முடிவு: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் ஜனவரி 18ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும்,’ என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கினார். அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். இந்நிலையில், 2017ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுகளை மீறி ரூ.300 கோடியை தனது பிள்ளைகளின் வங்கி கணக்குக்கு மல்லையா மாற்றினார். இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதில், கடந்த 2017ம் ஆண்டே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை நேரில் ஆஜர்படுத்த முடியாததால் தண்டனை விவரத்தை அறிவிக்கவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதில், சில சட்ட சிக்கல்களால் தாமதம் ஆவதாக, நீதிமன்றத்தில் கடந்த ஜனவரியில் ஒன்றிய அரசு தெரிவித்தது.  இந்நிலையில், நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ஆர்.பட், திரிவேதி அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘விஜய் மல்லையா குறித்த விவரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியது.

அவர் ஏதேனும் காரணத்துக்காக நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றால் அவர் சார்பில் வழக்கறிஞர் அறிக்கை சமர்ப்பிக்கலாம். இந்த வழக்கில் போதுமான அளவு காத்திருந்து விட்டோம். இனியும் எங்களால் காத்திருக்க முடியாது. ஒரு கட்டத்தில் ஒளியை கண்டுதான் ஆக வேண்டும். இவ்வழக்குக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும். எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதிக்கு இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு பட்டியலிடுகிறோம். அப்போது, இந்த வழக்கில் தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா நடுநிலையாளராக இருந்து நீதிமன்றத்துக்கு உதவிட கோருகிறோம்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Vijay Mallya ,Supreme Court , Can't wait any longer Final decision on Vijay 18 in Vijay Mallya case: Supreme Court action
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...