×

மகளிர் சுய உதவி குழுக்கள், மாணவர்கள் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

ஆவடி: மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் உதவியை, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். ஆவடி அடுத்த திருநின்றவூரில் இந்தியன் வங்கி கிளை 1972ம் ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது. தற்போது, 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, பொன்விழா கொண்டாட்டம் மற்றும் கடன் திருவிழா நேற்று முன்தினம் திருநின்றவூரில் நடந்தது. கிளை மேலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு 72 பேருக்கு ரூ.10.72 கோடிக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

இந்த கடன் தொகை இந்தியன் வங்கியின் திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயல், வேப்பம்பட்டு, ஆவடி, செயின்ட் பீட்டர் கல்லூரி ஆகிய கிளைகளின் மூலம், பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு குறு மற்றும் நடுத்தரத்தொழில் வளர்ச்சிக்காக சிறு, குறு தொழில் கடன், மாணவர்களின் உயர் கல்விக்கான கல்விக்கடன், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் முதியோர் வங்கி கடன், தனிநபர் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தனிநபர் சம்பள கடன், சொந்த வீட்டு கனவை பூர்த்தி செய்ய வீட்டுக்கடன் உள்ளிட்டவைகளுக்காக வழங்கப்பட்டது.

இதில் மண்டல மேலாளர் மோகன்தாஸ், உதவி மண்டல மேலாளர் அவனிஷ், பிரதான் உள்பட கல்லூரி அதிபர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் கடந்த 1990 ஆகஸ்ட் 15ம் தேதி இலங்கை தமிழருக்கான மறுவாழ்வு முகாம் துவக்கப்பட்டது.  இங்கு 927 குடும்பங்களைச் சேர்ந்த 2,756 பேர் வசிக்கின்றனர். இந்த முகாமை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடந்தது. எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் முர்த்தி, ஆர்டிஓ செல்வம், வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், கும்மிடிபூண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் முகாமில் வசிக்கும்  இலங்கை தமிழர்களுக்கும் ரூ.4000 நிவாரண தொகை அரசால் வழங்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ரூ.1000, 1500 எனவும், 12 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.750ல் இருந்து ரூ.1,000, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.400ல் இருந்து ரூ.500 என உயர்த்தி வழங்கப்படுகிறது. முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழகத்தில் உள்ள மற்றவர்களைப்போல் அனைத்து உரிமைகளும் வழங்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது என்றார்.

Tags : Tamils ,Minister ,S. M. Nasser , Women's Self Help Groups, Students Welfare Assistance to Sri Lankan Tamils: Presented by Minister S. M. Nasser
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!