×

கொசஸ்தலை ஆற்றிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்புக்குள் புகாமலிருக்க நிரந்தர தீர்வு: அமைச்சர் க.பொன்முடி பேச்சு

சென்னை: மணலி புதுநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கொசஸ்தலை ஆற்றின் உபரிநீர் குடியிருப்புக்குள் புகாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். கன மழை காரணமாக, பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 22 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், உபரிநீர் கொசஸ்தலை ஆறு  மணலி புதுநகர் பகுதி வழியாக வரும்போது தாழ்வாக உள்ள மகாலட்சுமி நகர், வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில்,  உபரிநீர் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணலி புதுநகர் பகுதிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர், மணலி புதுநகர் மற்றும் மாத்தூர் எம்எம்டிஏ காலனி ஆகிய பகுதிகளில் பள்ளிகளில் தங்கியுள்ள சுமார் 1000 பேருக்கு பாய்,  பெட்ஷீட், மளிகை பொருட்கள், பிஸ்கட், பால் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினர். அப்போது, அமைச்சர் க.பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், ‘மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொசஸ்தலை ஆற்றில் இருந்து உபரிநீர் குடியிருப்புக்குள் வராமல் தடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்து ஆய்வு செய்த தமிழக முதல்வர் கூறியுள்ளார். அதன்படி விரைவில் இந்த பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரையை உயர்த்தி  சுவர் அமைத்து உபரிநீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும். மேலும், தற்காலிக குடிசையில் வாழ்பவர்களுக்கு வீடு தரவும், பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். அப்போது, சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கணேசன் ஐ.ஏ.எஸ், திமுக பகுதி செயலாளர்கள் பரந்தாமன், தனியரசு,  நிர்வாகிகள் புழல் நாராயணன், கண்ணன், உதயராஜ், தாமரைச்செல்வன், பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.



Tags : Kosasthalai River ,Minister ,K. Ponmudi , Permanent solution to prevent floodwaters from entering Kosasthalai river: Minister K. Ponmudi
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...