×

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை: விமான நிலையங்களுக்கு பொது சுகாதாரத்துறை கடிதம்

சென்னை:தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள, சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு சர்வதேச விமான நிலையங்களின் இயக்குனர்களுக்கு, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தற்போது, 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டியுள்ளது.

இந்த நாடுகளில் இருந்தும், அங்கிருந்து இதர நாடுகள் வழியாக வரும் அனைத்து பயணியருக்கும், கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கப்படும் நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், ஏழு நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்த வேண்டும். பின் 8வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அடுத்த ஏழு நாட்களுக்கு, பயணிகள் தாங்களாகவே உடல்நிலையை கவனித்து கொள்ள வேண்டும்.பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட பயணியை, வழக்கமான கொரோனா தொற்று பயணிகளுடன் இல்லாமல், தனி அறையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படாத மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை செய்வது அவசியம். மேலும், அறிகுறி இல்லாவிட்டாலும், ஒவ்வொரு விமானத்தில் பயணித்து வரும் 5 சதவீத பயணியருக்கு கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். அதற்கான செலவை, அந்தந்த விமான சேவை நிறுவனங்களே ஏற்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் டாக்டர் தாரேஷ் அகமது, சுகாதார திட்ட இயக்குனர் உமா, மருத்துவ பணிகள் கழக திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, தமிழகத்தில் உள்ள, மருத்துவ கட்டமைப்புகள், மருந்து, ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : Corona ,South Africa , Corona testing for all travelers from 12 countries, including South Africa: Public Health letter to airports
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...