×

சாதாரண கொரோனா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் 6 முதல் 7 மடங்கு அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது: டாக்டர் பூபதி ஜான் தகவல்

சென்னை: சாதாரண கொரோனா வைரசைவிட ஒமிக்ரான் வைரஸ் 6 முதல் 7 மடங்கு அதிகம் பரவக்கூடிய, பாதிக்கக்கூடிய தன்மையும் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று டாக்டர் பூபதி ஜான் கூறினார். இதுகுறித்து டாக்டர் பூபதி ஜான் கூறியதாவது:  ஒமிக்ரான் என்பது தென்ஆப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதுவகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ். இந்த ஆர்என்ஐ வைரசின் தன்மையே ஆயிரக்கணக்கான முறை தன்னைத்தானே உருமாறிக் கொண்டுதான் இருக்கும். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அதில் உள்ள கொரோனா வைரஸ் உருமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா பற்றி ஏன் பயப்படுகிறார்கள் என்றால், சாதாரண கொரோனா வைரசை விட 6 முதல் 7 மடங்கு பரவக்கூடிய தன்மையும், அதிகம் பாதிக்கக்கூடிய தன்மையும் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் 98 சதவீதம் டெல்டா வகை வைரஸ்தான் உள்ளது.

அதேபோன்று உலகளவில் அதிகம் பரவியது டெல்டா வைரஸ்தான். இந்நிலையில் ஒமிக்ரான் தென்ஆப்பிரிக்காவில் தற்போது ஒரு சில இடங்களில் பரவி உள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. டெல்டா வைரசினால் அதிகமான மூச்சு வாங்குதல், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு இருந்தது. அதுபோன்று உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரசிக்கும் அதே அறிகுறிகள் தான் இருக்கும். அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் சில அறிகுறிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உடலில் சென்றால் மூச்சு இரைப்பு, காய்ச்சல், மூட்டுவலி, சுவை மற்றும் வாசனை தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஒமிக்ரான் அறிகுறிகள் குறித்து தற்போது கண்டுபிடிக்க முடியாது. நாளடைவில் அதன் பாதிப்புகளை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வருகிறது. அதேபோன்று இன்னும் ஒன்று, இரண்டு மாதங்களுக்கு பிறகு வேறு ஒரு வைரஸ் வரக்கூடும். அதனால் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவாது.

ஒரு பகுதியில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டு விட்டு மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. நாம் தடுப்பூசி போட்டாலும், மற்றவர்களும் தடுப்பூசி போட்டால் தான் நமக்கும் பாதுகாப்பு. எனவே அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டாலும் கூட்டமான பகுதிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காற்றோட்டமான இடங்களில் இருக்க வேண்டும். விட்டமின் சி மற்றும் சத்துள்ள உணவுகள், பழங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிகமாக பயப்படக்கூடாது, அதிகம் பயம் இருந்தால் உடம்பில் இருக்கக்கூடிய எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும். பயம் தீர்ந்து மன உறுதியோடு இருப்போமேயானால் கண்டிப்பாக எதிர்ப்பு சக்தி அதிகமாக கூடும். ஆகையால் எந்தவிதமான கொரோனா வைரஸ் வந்தாலும், நாம் பயமில்லாமல் தெளிவோடு சிந்தனையோடு இருக்க வேண்டும். அப்பொழுது தான் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது உலகளாவிய கருத்து.இவ்வாறு டாக்டர் பூபதி ஜான் கூறினார்.


Tags : Dr. ,Bhupathi John , Omigron virus is 6 to 7 times more likely to spread than normal corona virus: Dr. Bhupathi John
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!