மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனல் வீசிய நிலையில் அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது; 2 பேரின் செல்வாக்கும் சரிவதால் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

சென்னை: உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதிமுக செயற்குழு இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. தற்போது, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் எதிராக பேசி வருவதால் இன்றைய கூட்டத்திலும் புயலை கிளப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வமும் அணி திரட்டுவதால் இன்று நடைபெறும் கூட்டம் தொண்டர்களிடையே எதிர்பார்பை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு, அதிமுக கட்சியை கடந்த 5 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடையே செல்வாக்கு இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு தலைவர்களும் ஒற்றுமையாக இல்லை. தனித்தனி அறிக்கை வெளியிடுவது, தனித்தனியே பிரசார கூட்டங்களில் பங்கேற்பது, அதிமுக தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி, முன்னணி நிர்வாகிகளும் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். கட்சி தலைமையை எதிர்த்து வெளியில் வெளிப்படையாக கருத்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், கடந்த வாரம் புதன்கிழமை (24ம் தேதி) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டம், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால் அந்த பிரச்னை பற்றி பேசாமல், கட்சி தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பலரும் எதிர்ப்பு கருத்து தெரிவித்ததால் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசும்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவரை அடிக்க பாய்ந்த சம்பவமும், அடுத்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் - சி.வி.சண்முகம் மோதல், அடிக்க பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘கட்சியில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை.

நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை. சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரத்துக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால், வடமாநிலங்களில் வன்னியர்கள் ஓட்டும் கிடைக்கவில்லை. இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாநில மக்களும் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் அதிமுக தமிழகத்தில் ஆட்சியை பறி கொடுத்தது. ஒரு சிலரின் சுயநலத்துக்காக கட்சியை நடத்தக்கூடாது. தொண்டர்கள் அனைவரின் ஆசைகளையும் கட்சி தலைமை நிறைவேற்ற வேண்டும். அதுதான் சிறந்த தலைமை” என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக குற்றம்சாட்டி பேசினார். அதேபோன்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ‘‘நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த நிர்வாகிகளுக்கு எந்த பொறுப்பும் ஒரு ஆண்டுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது. வழிகாட்டு குழு தலைவர்களின் எண்ணிக்கையை 18ஆக உயர்த்தி, கட்சியில் பதவியை பிரித்து வழங்க வேண்டும். ஜெயலலிதா வழியில் அதிமுகவை நடத்த வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலில் வெற்றிபெற முடியும். மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும். தோல்விக்கு அவர்கள்தான் பொறுப்பு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமே நன்றாக இருந்தார்கள். 2ம், 3ம் கட்ட தலைவர்கள் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அதனால்தான் தொடர்ச்சியாக தேர்தலில் தோல்வி அடையும் நிலை உள்ளது” என்றார்.

இதுபோன்று ஒவ்வொரு நிர்வாகிகளும், கட்சி தலைமையை விமர்சித்தே பேசினர். அதிமுகவில் வழக்கமாக இதுபோன்று நடப்பது புதிய அனுபவம் ஆகும். கட்சி தலைமை சொல்லும் கருத்தை கேட்கும் நிலை மாறி, ஆளாளுக்கு பேசும் நிலை தற்போது அதிமுகவில் நிலவியுள்ளது. இது கட்சி தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து கட்சி தொண்டர்கள் கூறும்போது,‘‘அதிமுகவில் தற்போதைய தலைமையை கட்சியினரும், பொதுமக்களும் ஏற்கவில்லை என்பது கடந்த தேர்தல்களில் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே, கட்சி தலைமை இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஒற்றை தலைமையை வரவேற்கிறோம்” என்று கூறினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான், இன்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்கள். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என 250 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியும். இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டம், தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விரிவாக பேசி நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும், இதுவரை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி கூட்டங்களில் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பார். எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுகளுக்கு இதுவரை அவர் ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம், அதிமுக கட்சியின் செயல்பாடு அவருக்கு பிடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. தற்போதைய நிலையில், செங்கோட்டையன்தான் மூத்த தலைவராக அதிமுகவில் உள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்து செங்கோட்டையன் தான் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகும், தலைமை பதவியை கைப்பற்ற வாய்ப்புகள் இருந்தும், செங்கோட்டையன் எந்த முயற்சியும் செய்யாமல் அமைதி காத்தார்.

தற்போது, தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், செங்கோட்டையன் தலைமைக்கு எதிராக கம்பு சுற்ற முயன்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கட்சியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கே வாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைக்கு எதிரானதாக உள்ளது. இதுபோன்ற செயல்களால், அதிமுகவின் தற்போதைய தலைமை மீது நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில்தான் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், செங்கோட்டையனின் நடவடிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதிமுக பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது, கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்குவது, சசிகலா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில், இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் காரசார மோதலுக்கு பஞ்சம் இருக்காது. மேலும் எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினரும் ரகசியமாக ஆதரவு திரட்டி வருவதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: