×

உலக நாடுகளை 2 ஆண்டாக முடக்கிய கொரோனாவின் புது அவதாரம்; ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டாவை காட்டிலும் கொடூரமானது ‘ஒமிக்ரான்’: இந்தியாவில் மூன்றாவது அலை தாக்குதல் ஏற்படுமா?

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டாக உலக நாடுகளை முடக்கிய கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என்று பரவிய நிலையில், தற்போது வேகமாக பரவிவரும் ‘ஒமிக்ரான்’ வைரசானது மேற்கண்ட வைரஸ்களை காட்டிலும் கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் மூன்றாவது அலையாக தாக்குதல் நடத்துமா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளை 2 ஆண்டாக முடக்கி வைத்துள்ள கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமிக்ரான், தென்னாப்பிரிக்கா,  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் பரவியுள்ளது. ஒமிக்ரான்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருகின்றன.

பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளில் கொடுக்கப்பட்ட தளர்வுகளை மறுபரிசீலனை செய்கின்றன. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஒமிக்ரான் வைரஸ் உலகளவில் வேகமாக பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதாக உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் சுமார் 50 வகையான மாற்றங்களைக் கொண்டுள்ளதாகவும், அவற்றில் 30 வகையான மாற்றங்கள் திடீர் மாற்ற ஸ்பைக் புரதத்தில் உள்ளன என்றும் கூறுகிறது. இந்த திடீர் மாற்றங்களில் சில வகைகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாகவும், அவை நோயெதிர்ப்பு சக்தியை தாக்கும் என்றும் கூறியுள்ளது.

ஒமிக்ரான் வைரஸ் தொற்றானது, உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட உருமாற்றமடைந்த வைரஸ் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா ஆகிய வைரஸ்களை ஆபத்தானதாக கூறியது. மேற்கண்ட 4 வைரசுகளுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, ஆல்ஃபா மற்றும் பீட்டா வகை வைரஸ் தொற்றுகள் ‘சார்ஸ்-கொரோனா-2’வை விட அதிக வீரியமானதாக கருதப்பட்டன. ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் காணப்படும் டெல்டா வகைகள் முந்தைய வகைகளை விட 43% முதல் 90% அதிக வீரியமிக்கது என்று கூறப்பட்டது.

ஆனால், இந்தியாவை பொருத்தமட்டில் கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக மக்கள்  நினைத்துள்ளனர். முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி போன்றவற்றை  பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. தேசிய தலைநகரான டெல்லியில், பெரும்பாலான  மக்கள் முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். காரணம் அங்கு சுற்றுச்சூழல்  மாசுடன் கொரோனா விதிமுறைகளும் அமலில் உள்ளதால் விதிமுறைகள் ஓரளவு  பின்பற்றப்படுகின்றன. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரம் பேருக்கு  தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட 94 கோடி  பேரில் 80 சதவிகிதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி  போடப்பட்டிருக்கிறது.

ஆனால் நோய்த் தொற்று பரவல் முடிவுக்கு வரவில்லை  என்பதே உண்மை. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை  ஏற்படுத்திய நிலையில், மூன்றாவது அலை என்ற ஒன்று வரவில்லை. அதனால்  கட்டுப்பாடுகள் வெகுவாக தளர்த்தப்பட்டன. ஆனால், தற்போது பரவி வரும்  ஒமிக்ரான் வைரசால், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா? என்ற அச்சம்  மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா ேபான்ற வைரஸ் தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறிய நிலையில், ஒமிக்ரான் வைரசின் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால், நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

உலக நாடுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்காவை சேர்ந்த தடுப்பூசி நிறுவனமான மாடர்னா, ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்காக தனி தடுப்பூசி உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும், அதற்காக 2 முதல் 3 மாதங்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போதுள்ள தடுப்பூசி பயனுள்ளதாக இருக்குமா? என்பது குறித்து தடுப்பூசி நிறுவனங்கள் தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மார்டனா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் பர்டன் கூறுகையில், ‘ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இக்கட்டான இந்த நேரத்தில், ஒமிக்ரானுக்கு என்று தனியாக தடுப்பூசி போட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அடுத்த சில வாரங்களில் சிறப்பு தடுப்பூசி தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. புதியதாக உருமாற்றமடைந்த கொரோனாவின் மாறுபாடு மற்றும் தடுப்பூசி செயல்திறன் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், அது ஒமிக்ரானின் வீரியத்துடன் ஒத்து போகிறதா? என்பதை ஆய்வு செய்கிறோம். தற்போது புதியதாக பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளை ஆராய்ந்து வருகிறோம்’ என்றார்.

ஏழை நாடுகளால் பரவிய ஒமிக்ரான்?
மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஆடம் விட்லி மற்றும் பீட்டர் டோஹெர்டி நிறுவன நிபுணர் ஜெனிபர் ஜூனோ ஆகியோர் கூறுகையில், ‘தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் காட்டினால் உருமாற்றமடைந்த வைரஸ் வேகமாக பரவுவதற்கு வழிவகுக்கும். குறைந்தளவு எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், உருமாற்றமடைந்த வைரசுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் நிச்சயமாக தொற்றுநோய் வேகமாக பரவும். ெதாற்றின் தீவிரம் அதிகமாகும் போது, அது உருமாற்றமடைந்த வைரசாக மாறும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஏழை நாடுகளில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டதே உருமாற்றமடைந்த வைரஸ் உருவானதற்கு காரணமாக இருக்கலாம். ஒமிக்ரான் வைரசை பொருத்தமட்டில் அதன் ஸ்பைக் புரதத்தில் 32 பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொற்றில் ஒன்று, நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஓரளவிற்கு தான் பலன்தரும்’ என்றனர்.

மும்பைக்கு வந்த 1,000 பேர் யார்?
கடந்த 15 நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 1,000 பயணிகள் மும்பை வந்துள்ளதாகவும், இவர்களில், 466 பேர் மட்டுமே விமான நிலைய ஆணைய அதிகாரிகளின் பட்டியலில் உள்ளதாக கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களில் கடந்த 15 நாளில் மட்டும் 1,000 பேர் மும்பை வந்துள்ளனர். இவர்களின் முழு பட்டியல் இன்னும் பெறவில்லை. 1,000 பேரில் 466 பேரின் விபரம் கிடைத்துள்ளது; 100 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளங்கண்டு, அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். அதன் அறிக்கை முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கும். அதன்பின், அவர்களை தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம்’ என்றார்.

உண்மையை சொன்னது தப்பா?
உருமாற்றமடைந்த கொரோனா வைரசான ஒமிக்ரான், இம்மாத தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு  முறைப்படி தெரிவிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கையால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதுகுறித்து தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா கூறுகையில், ‘எங்கள் நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் நியாயமற்றது; பாகுபாடானது. இதனால் நாங்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். உலகில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை நிறுத்த முடியாது. எங்களது நாட்டில் கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது என்ற உண்மையை நாங்கள் வெளிப்படையாக அறிவித்தோம். அதற்கு பயனாக எங்களுக்கு எதிராக தடைகள் விதிப்பது நியாயமல்ல’ என்று வருத்தத்துடன் கூறினார்.

சீனா, இந்தியா உதவி
ஆப்பிரிக்க நாடுகள் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு தேவையான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில், சீனா-ஆப்பிரிக்கா கூட்டுறவின் 8வது மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், ‘ஆப்பிரிக்க நாடுகள் கொரோனா, உருமாறிய ஒமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராடும் வகையி்ல் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். ஏற்கெனவே 60 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத்தை ேமம்படுத்தும் வகையில் 10 சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த, 1500 மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர்’ என்றார்.

பாதிப்பு 330% திடீர் உயர்வு
தென்னாப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில் புதிய வகை ஒமிக்ரான் தொற்று 330 சதவீதம் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் பாதிக்கப்பட்ட 77 பேரும் தடுப்பூசி போடப்பட்டவர்கள். இந்த வாரம் புதிய வைரஸ் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட 135% என்பதில் இருந்து 330% ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பொது மருத்துவர் உன்பென் பிள்ளே கூறுகையில், ‘கடந்த 10 நாட்களில் புதிய வகை ஒமிக்ரான் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகள் உள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களைவிட உடல் நலத்துடன் உள்ளனர்’ என்றார்.

ஜி-7 நாடுகள் அவசர கூட்டம்
ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து ஜி - 7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொண்ட அவசர கூட்டம் நடந்தது. இங்கிலாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஒமிக்ரான் குறித்து விவாதிக்கப்பட்டது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ெதாடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், ‘புதிய வைரஸ் பரவலை சமாளிக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தொற்று குறித்து உலக நாடுகளுக்கு தெரிவித்த தென்னாப்பிரிக்காவை பாராட்டுகிறோம். கூட்டுக் குழு தலைவர்கள் உலக சுகாதார அமைப்புடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவார்கள். ஒமிக்ரான் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அடுத்த கூட்டம் டிசம்பரில் நடக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : India , The new incarnation of the corona that has paralyzed the nations of the world for 2 years; ‘Omigron’ worse than alpha, beta, gamma, delta: Will there be a third wave attack in India?
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...