கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி: 9 ஆயிரம் வாத்துகள் செத்து விழுந்தன

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில், நோரோ, ஜிகல்லா உள்பட வைரஸ் நோய்களும் பரவி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நிபா வைரசும் பரவியது. அதன்பின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் பரவியது. இந்நிலையில் தற்போது மீண்டும் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவில் வாத்து பண்ணைகள் உள்ளன.

ஆலப்புழா அருகே அம்பலப்புழாவில் ஜோசப் என்பவர் வாத்து பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கடந்த சில நாட்களாக வாத்துகள் திடீர் திடீரென செத்து விழுந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள் இறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து திருவல்லாவில் உள்ள பறவைகள் நோய் சிகிச்சை மையத்திற்கு தகவல் தெரிவித்தார். டாக்டர்கள் உடனடியாக சம்பவம் இடம் சென்று செத்த வாத்துகளின் ரத்த மாதிரியை சேகரித்து, திருவனந்தபுரத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதன் முடிவுகள் வந்தால் தான் வாத்துகள் இறப்புக்கு பறவை காய்ச்சல் தான் காரணமா என்பது தெரியவரும். இதற்கிடையே ஜோசப்பின் பண்ணையில் உள்ள மற்ற வாத்துகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இவரது பண்ணையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துகள், பறவை காய்ச்சல் நோய் பாதித்து இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More