×

வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 1400 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் பகுதியில் வேகவதி ஆறு தொடங்கி, காஞ்சிபுரம், அய்யம்பேட்டை, திருமுக்கூடல் வழியாக சென்று பாலாற்றில் இணைகிறது. காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக வேகவதி ஆற்றில் சுருங்கிவிட்டது. சில இடங்களில் ஆறு இருக்கும் இடமே தெரியாத நிலை உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதுபோன்று நேற்று நள்ளிரவு வேகவதி ஆறு நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் 1400க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  வெள்ள நீர் தங்குதடையின்றி செல்வதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே பழுதடைந்து கிடந்த தாயார் அம்மன் குளம்  தரைப்பாலம் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் வேகவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் வீடுகளை காலி செய்து வேறு இடத்துக்கு செல்லும்படி அப்பகுதியினரிட் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

வேகவதி ஆற்றை ஆக்கிரமித்து வீடுகட்டி குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கீழ்கதிர்பூர் கிராமத்தில் 17 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.150 கோடி மதிப்பில் 2,112 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் கட்டுமான பணிகள் பூர்த்தியான நிலையில், வீடுகளை ஒப்படைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆக்கிரமிப்பாளர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு செல்ல மறுத்து வருவதால் மழை காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே,  ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து வேகவதி ஆற்றை  மீட்டு மழை காலங்களில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Vegavathi River , Vegavathi River floods: 1400 houses flooded
× RELATED வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...