கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றில் திடீரென நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாக, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-101 மற்றும் 102க்குட்பட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரட்டூர் அணைக்கட்டிலிருந்து 29.11.2021 அன்று மாலை 3.00 மணியளவில் உபரிநீர் 3000 கனஅடி அளவிற்கு வெளியேற்றப்பட்டதால், கூவம் ஆற்றில் நீரின் ஓட்டம் திடீரென அதிகரித்தது. குறிப்பாக, அண்ணாநகர் மண்டலம், வார்டு-101 மற்றும் 102க்குட்பட்ட பாரதிபுரம், கதிரவன் காலனி, மஞ்சக்கொல்லை மற்றும் திருவீதியம்மன் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளை ஒட்டி கூவம் ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி 29.11.2021 அன்று இரவு அந்தப் பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டு, மண்டல அலுவலர் மற்றும் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்களை உடனடியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில், நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் 500 மணல் மூட்டைகள் உடனடியாக கொண்டு வரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டது. மேலும், 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டும் கரைகள் பலப்படுத்தப்பட்டன.

மாநகராட்சியின் சார்பில் மஞ்சக்கொல்லை நடுநிலைப்பள்ளி மற்றும் மு.வ.வரதராசனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் நிவாரண மையங்கள் உடனடியாக திறக்கப்பட்டு பொதுமக்கள் அங்கு பாதுகாப்பாக தங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், மாநகராட்சியின் சார்பில் 3000 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இன்று (30.11.2021) காலை நிலவரப்படி கூவம் ஆற்றில் நீரின் ஓட்டம் குறைந்து சீராக உள்ளது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்களும், நீர்வளத்துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: