×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடிப்பதால் தாமிரபரணியில் 4வது நாளாக பாய்ந்தோடும் வெள்ளம்: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் தொடங்கி நேற்று  அதிகாலை வரை தொடர்ந்து பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. பாபநாசத்தில் 91 மிமீ,  மணிமுத்தாறில் 84 மிமீ மழையும் கொட்டித் தீர்த்தது.  தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு  சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது.  நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து நேற்று அதிகாலை வரை  பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி  மலைப்பகுதியில் அதிக மழை பெய்தது. இதனால் ஏற்கனவே  நிரம்பும் நிலையை எட்டியுள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நேற்று முன்தினம் மாலை  முதல் நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இந்த அணைகளில் இருந்து  விநாடிக்கு 12,480 கனஅடி நீரும்,  தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில்  இருந்து விநாடிக்கு 5,700 கனஅடிநீரும் தாமிரபரணி ஆற்றில்  திறக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே பெய்யும் மழைநீர், காட்டாற்று வெள்ளமாக ஓடி வந்து தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் நேற்று  அதிகாலை 20 ஆயிரம் கனஅடி நீர் வெள்ளமாக பாய்ந்தது.

இதன் காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயில், தைப்பூச மண்டபம் ஆகியவற்றை வெள்ள நீர் சூழ்ந்தது. தாமிரபரணியின் இரு கரைகரையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் செல்கிறது. நேற்று முன்தினம் பகலில்  தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி கடந்துசெல்லும்  குறுக்குத்துறை- மேலநத்தம் தரைப்பாலத்தில் போலீசார் நின்று அப்பகுதி வழியாக வருபவர்களை  எச்சரித்து திருப்பி அனுப்பினர். ஆற்றில் யாரும் குளிக்க  அனுமதிக்கப்படவில்லை. அதிகளவில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் தாமிரபரணியின் இரு  கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும.  ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ புகைப்படம் எடுக்கவோ செல்ல வேண்டாமென நெல்லை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

 இதேபோல் சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலப்பதால் தாமிரபரணியின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்றது. தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜிம், தாமிரபரணியின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 5,205 கனஅடிநீர் வந்தது. விநாடிக்கு 4,020   கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீரிருப்பு 138.20 அடியாக உள்ளது.   சேர்வலாறு அணை நீர்மட்டம் 147.21 அடியாக உள்ளது. இதில் இருந்து 2,659 கனஅடி திறக்கப்படுகிறது. காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலப்பதால் விநாடிக்கு 8080 கனஅடி தண்ணீர் கரைபுரள்கிறது. 104.20 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம், நேற்று மாலை 108.80 அடியாக   ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2958   கனஅடி நீர் வந்தது. வெளியேற்றம் இல்லை. வடக்கு பச்சையாறு அணை நீரிருப்பு   39 அடியாக உள்ளது. அணைக்கு 346 கனஅடி நீர் வந்தது. நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 400 கனஅடிநீர் அப்படியே   வெளியேற்றப்பட்டது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக இருந்தது. அணைக்கு 128 கனஅடி நீர்   வந்தது. 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடனாநதி அணை நீர்மட்டம் 82.70  அடியாக உள்ளது. அணைக்கு வரும் 1,755 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.  ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 117.91 கனஅடிநீர்  வெளியேற்றப்பட்டது. கருப்பாநதி நீர் இருப்பு 68.24 அடியாக உள்ளது.  அணைக்கு வரும் 100 கனஅடி  வெளியேற்றப்பட்டது.
குண்டாறு நீர்மட்டம்  36.10 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 45 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.  அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.75 அடியாக உள்ளது. அணைக்கு 20 கனஅடி நீர்  வருகிறது. 40 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.

அவசர உதவிக்கு தொடர்பு எண்கள்
மழை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா ெதாலைபேசி  எண்  1077, 0462-2501012 மற்றும் 0462-2501070 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு  தெரிவிக்கலாம். மேலும் நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகள் குறித்து www.neervalam.in/waterlogging என்ற இணையதளத்திலும்  புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார். ஏற்கனவே  நிரம்பும் நிலையை எட்டியுள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நேற்று முன்தினம் மாலை  முதல் நீர்வரத்து மேலும் அதிகரித்தது.


Tags : Tamiraparani ,Western Ghats , Western Ghats, Hills, Heavy rains, Tamiraparani, floods
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...