ஜெயலலிதா மரண வழக்கு!: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு 700 சதுர அடி இடம் ஒதுக்கியது தமிழக அரசு..!!

டெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு புதியதாக 700 சதுர அடி இடம் ஒதுக்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை எழிலகம் வளாகத்தில் கலச மஹாலில் 200 சதுர அடி பரப்பளவில் ஆணையம் தற்போது செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமானது ஏற்கனவே ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

இந்த தடையை நீக்க உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆணையம் வெறும் 200 சதுர அடியில் இயங்கி வருவதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். சமையலறை அளவுகூட இல்லாத இடத்தில், ஆணையம் செயல்படுவதா? என கேள்வி எழுப்பிய அவர்கள், ஆறுமுகசாமி ஆணையம் செயல்படுவதற்கான போதுமான மாற்று இடத்தை வருகின்ற 30ம் தேதிக்குள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 200 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்த ஆணையமானது தற்போது 700 சதுர அடி கொண்ட புதிய இடத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வழங்கி இருப்பதாக தெரிவித்தார். கூடுதல் இடம் ஒதுக்கியது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையமும் திருப்தி வெளியிட்டுருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

Related Stories: