ஒமைக்ரான் பரவலால் நேரடி விமானங்கள் ரத்து எதிரொலி!: தென்னாப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு பயணிகள்..!!

ஜொஹனஸ்பர்க்: உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கிருமி பரவல் எதிரொலியாக பல்வேறு நாடுகள் விமான சேவையை ரத்து செய்துவிட்டதால் வெளிநாட்டு பயணிகள் தென்னாப்பிரிக்காவில் சிக்கி தவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பல அடக்கு உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனா கிருமியான ஒமைக்ரான், பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் நுண்ணுயிரியின் ஆபத்தான தன்மை குறித்து தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, இஸ்ரேல், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

இதனால் பிரிட்டன், அமெரிக்கா நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், தென்னாப்பிரிக்க விமான நிலையங்களில் செய்வதறியாது தவித்து வருகின்றன. இதுகுறித்து இங்கிலாந்து பயணி ஒருவர் கூறியதாவது, ஒரு குறுகிய விடுமுறைக்காக வந்தேன். விமானம் ரத்தாகிவிட்டதால் வெறுப்பாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என குறிப்பிட்டார். அமெரிக்க பயணி ஒருவர் கூறுகையில், எங்கள் விமானம் ஆம்ஸ்டர்டாம் வழியாக செல்லவிருந்ததால், உடனடியாக ரத்து செய்யப்பட்டது. எனவே, யுனைடெட் ஏர்லைன்ஸ் நேரடி விமானத்தில் இடம் பிடிக்க போராடி வருகின்றோம்.

எங்களது நண்பர்களின் காத்திருப்பு பட்டியலை எங்கள் பெயருக்கு மாற்ற முயற்சி செய்கின்றோம். ஏன் என்றால் அந்த விமானத்தை தவறவிட்டால் டிசம்பர் 8ம் தேதி வரை வேறு விமானங்களில் ஒரு இடமும் இல்லை என்ற கூறினார். பெரும்பாலான நாடுகளுக்கான நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாற்று வழியில் செல்லும் விமானங்களில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. கென்யா மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்க பயணிகள், ஜொஹனஸ்பர்க் விமான நிலையத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கின்றன.

Related Stories:

More