கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டால் புகார் அளிக்கலாம்: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணைய தலைவர் தகவல்

சென்னை: தேசிய தூய்மைப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயகுமார் முன்னிலையில் களப்பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய துப்புரவுப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக  தாட்கோ மூலம் 9 பயனாளிகளுக்கு பருவக் கடனாக ரூ.40,56,300க்கான காசோலையினை  ஆணையத் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.

பின்னர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘கழிவுநீர் அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதை மீறி யாராவது மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால்  பொதுமக்கள் உடனடியாக தேசிய உதவி எண் 14420 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார். ஆய்வுக் கூட்டத்தில் சென்னைக் குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ஆகாஷ்,  பொறியியல் இயக்குநர் மதுரைநாயகம் , நிதி இயக்குநர் முத்துகுமாரசாமி, பொது மேலாளர் ராஜகிருபாகரன், தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: