×

ஸ்வீடனில் முதல் பெண் பிரதமர் இரண்டாவது முறையாக தேர்வு

கோபன்ஹேகன்: ஸ்வீடன் நாட்டில் முதல் பெண் பிரதராக மகதலேனா ஆன்டர்சனை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்துள்ளது. ஸ்வீடன் நாட்டில் சமூக ஜனநாயக கட்சி தலைவரான ஸ்டீபன் லோபன் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனால் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து கட்சியின் புதிய தலைவராக நிதியமைச்சராக இருந்த மகதலேனா ஆன்டர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு கடந்த வாரம் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 349 பேரில் 117 உறுப்பினர்கள் மகதலேனா ஆன்டர்சன் பிரதமராவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 174 பேர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். மேலும் 57 பேர் வாக்களிக்கவில்ைல. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 175 எதிர்ப்பு வாக்குகள் பதிவாகததால் மகதலேனா ஆன்டர்சன் ஸ்வீடனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடன் நாட்டில் பிரதமராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதனை தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக்கு கூட்டணி கட்சியான கிரீன்ஸ் கட்சியின் ஆதரவு பெறவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்த கட்சி அறிவித்தது. இதனால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகதலேனா ஆன்டர்சன் பெரும்பான்மையை இழந்தார். பதவியேற்ற 7 மணி நேரங்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இதற்கிடையில் நேற்று நடந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பில் மீண்டும் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.  ஒரே கட்சி மைனாரிட்டி அரசை அவர் அமைத்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags : Sweden , Sweden, female Prime Minister, elected
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்