×

விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை: வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு: 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்

புதுடெல்லி: புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் பயண தடைகளை அறிவித்து வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை எந்த நாட்டிற்குள் தடை விதிக்கவில்லை. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:

* வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சுய உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து கொரோனா நெகட்டிவ் என்ற ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பயணியிடம் கொரோனா நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே அவரை விமானத்தில் ஏற விமான நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.
* ஒமிக்ரான் வைரஸ் பரவிய மற்றும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய சர்வதேச விமான நிலையங்களில் கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
* அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தால் அவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். 8வது நாள் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிலும் நெகட்டிவ் என வந்தால் அடுத்த 7 நாட்கள் தங்கள் உடல் நிலையை தாங்களே சுய கண்காணிப்பு செய்து கொள்ள வேண்டும்.
* ஒருவேளை 2வது பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தாலோ விமான நிலைய பரிசோதனையிலேயே பாசிட்டிவ் என வந்தாலோ உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு வைரஸ் மரபணு வகை ஆய்வுக்கு அனுப்பப்படும்.
* அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படும். ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்று இல்லை எனில் டாக்டர்கள் முடிவுப்படி அவர்கள் சிகிச்சைக்குப்பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். ஒருவேளை ஒமிக்ரான் வகை தொற்று என உறுதியானால் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
* ஆபத்து நாடுகளை தவிர பிற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் ரேண்டமாக 5 சதவீதம் பேருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
* நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்களும் விமான நிலைய பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தவர்களும் 14 நாட்கள் சுய கண்காணிப்பை செய்து கொள்ள வேண்டும். பாசிட்டிவ் எனில் மரபணு உறுதிபடுத்துதல் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்படும். வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்படும்.
* தனிமைப்படுத்துதல் அல்லது சுய கண்காணிப்பின் போது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தேசிய (1075) அல்லது மாநில சுகாதாரத்துறை உதவி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
* பயணிகள் அனைவரும் கடந்த 14 நாட்கள் வேறு எந்த நாட்டிற்கு சென்றனர் எங்கிருந்தனர் என்ற பயண விவர அறிக்கையை கட்டாயம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு விதிவிலக்கு
வெளிநாட்டிலிருந்து வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைப்படி சிகிச்சை அளிக்கப்படும்.

Tags : Corona , Airport, Corona Test
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...