×

தொடர் கனமழையால் திருத்தணி முருகன் கோயிலில் பார்க்கிங் சுற்றுச்சுவர் இடிந்தது

திருத்தணி:  திருத்தணி முருகன் கோயிலில் பார்க்கிங் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர்  திடீரென இடிந்து விழுந்தது. திருத்தணி முருகன் கோயிலிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த மலைக்கோயில் பக்கவாட்டில் உள்ள கஸ்தூரிபாய் தெரு பகுதியில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தணி பகுதியில் சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் நேற்று கஸ்தூரிபாய் தெரு மற்றும் மலைக்கோயில் பகுதிக்கு செல்லும் பாதை இடையே சுமார் 12 அடி நீளத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டதால் சுற்றுச்சுவர் உடைந்து விழுந்தது. அந்த சமயத்தில் ஆட்கள் யாரும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து திருத்தணி நகராட்சி பணியாளர்கள் கோயில் ஊழியர்கள் வந்து பார்வையிட்டு சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததால் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த திருத்தணி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தரைப்பாலம் மூழ்கியது: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் கேசவபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் பாகசாலை எல்வி.புரம் வழியாக கொசஸ்தலை ஆற்றிலும் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் பிஞ்சிவாக்கம் வழியாக செல்லும் கூவம் ஆற்றிலும் கலந்தது.

கடந்த ஒரு வாரமாக பாகசாலை வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குப்பம்கண்டிகையில் உள்ள தரைப்பாலம் எல்வி.புரம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் ஆகியவை முற்றிலும் அடித்துசெல்லப்பட்டு விட்டது. இதன் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி மணவூர் திருவாலங்காடு திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு பாகசாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்து சென்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது பாகசாலை தரைப்பாலத்தை மழைவெள்ளம் முற்றிலுமாக மூழ்கடித்துவிட்டதாலும் கேசவபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மொத்தமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும் பாகசாலை தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்துக்கும் முற்றிலும் முடங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்படும் முன்பாக கூவம் கொசஸ்தலை ஆற்றில் பாதுகாப்புடன் தண்ணீர் திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

கோயில் மீது மரம் சாய்ந்தது
திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை ஆறுமுகசாமி கோயிலில் நுழைவுவாயில் பகுதியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இங்குள்ள பழமையான புளியமரம் நேற்று அதிகாலை சாய்ந்து ஆஞ்சநேயர் கோயில் கோபுரம் மீது விழுந்தது. இதை பார்த்தது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோபுரம் மீது விழுந்துள்ள புளியமரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பக்தர்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் `பெருமாள் சன்னதி ஆறுமுகசாமி கோயிலின் மேற்கூரை உடைந்துள்ளதால் மழைநீர் ஒழுகி கோயில் வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே கூரையை உடனடியாக சீரமைக்க தமிழக அரசும் இந்து அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Tags : Thiruthani Murugan Temple , Heavy rain, Thiruthani, Murugan Temple
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் 2ம் நாள்...