×

திருநின்றவூர் பேரூராட்சியில் மழை பாதிப்புகளை படகு மூலம் அமைச்சர் ஆவடி நாசர் ஆய்வு: தண்ணீரை அகற்ற உத்தரவு

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை படகு மூலம் நேரில் சென்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு செய்தார். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைதொடர்ந்து பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி மாநகராட்சி திருநின்றவூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் முத்தமிழ் நகர் சுதேசிநகர் கன்னிகாபுரம் அன்னை இந்திரா நகர் திருவேங்கட நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் ஆறாக ஓடியது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த ஆவடி தொகுதி எம்எல்ஏவும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். அவர் திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் அன்னை இந்திரா நகர் ராமதாசபுரம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளை படகு மூலம் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை காண்பித்து தண்ணீரை அகற்ற உத்தரவிட்டார். மேலும் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் அவர்களுக்கு தேவையான பாய் பெட்ஷீட் உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் இளநிலை பொறியாளர் சிவகுமார் திமுக பேரூர் செயலாளர் தி.வை.ரவி மாநில மாணவர் அணி இணைச்செயலாளர் பூவை ஜெரால்டு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜெ.ரமேஷ் ம.ராஜி விமல்வர்ஷன் மற்றும் பேரூர் நிர்வாகிகள் வட்டச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Minister ,Avadi Nasser ,Thiruninravur , Thiruninravur Municipality, Rain Impact, Minister Nasser, Study
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...