சென்னை மாநகராட்சி தேர்தலில் ஆண், பெண் வார்டுகளை சமமாக ஒதுக்க கோரிய வழக்கு வாபஸ்: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கு தலா 16 இடங்கள் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 168 இடங்களில் கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் கடந்த 2019 ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசிதழில் 89 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்களுக்கு 79 இடங்கள் மட்டுமே கிடைக்கும். எனவே, மாநகராட்சி தேர்தலில் இரு பாலருக்கும் சமமான வார்டுகளை ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்கப்படுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தற்போது சென்னை மாநகராட்சி வார்டுகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இடஒதுக்கீடு வழங்கி 2019ல் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின், மண்டல வாரியாக ஒதுக்கீடு வழங்க அறிவிப்பாணை  வெளியிடப்பட்டது. ஒற்றைப் படைகளில் வார்டுகள் எண்ணிக்கை வரும் போது, கூடுதலாக வரும் ஒரு வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாநகராட்சி சட்டத்தின் குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களை  எதிர்த்து புதிய வழக்கு தொடர்வதாக கூறி, இந்த வழக்கை திரும்பப் பெற மனுதாரர் தரப்பு வக்கீல் அனுமதி கோரினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர். மேலும், மாநகராட்சி சட்ட திருத்தத்தை  எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: