×

ரூ.2.50 லட்சத்திற்கு குழந்தையை விற்பனை செய்த வழக்கில் திடீர் திருப்பம் 2 பெண் புரோக்கர்கள் உட்பட 4 பேர் கைது: பணத்தை கொள்ளையடித்ததாக குழந்தையின் தாய் நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

சென்னை: ரூ.2.50 லட்சத்திற்கு ஆண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, குழந்தையை விற்பனை செய்த பணத்தை நண்பரிடம் கொடுத்துவிட்டு, யாரோ கொள்ளையடித்துவிட்டதாக காவல் நிலையத்தில் குழந்தையின் தாய் பொய் புகார் அளித்து நாடகமாடியது விசாரணையில் அம்லமாகியுள்ளது. இது தொடர்பாக 2 பெண் புரோக்கர்கள், குழந்தையின் தாய் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் காவாங்கரை கே.எஸ். நகர் 6வது தெருவை சேர்ந்தவர் யாஸ்மின்(28). இவருக்கு மோகன் என்பவருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஷர்மிளா(10) என்ற பெண் குழந்தை உள்ளது. யாஸ்மின், 2வது முறையாக 5 மாதம் கர்ப்பமாக இருந்த போது அவரது கணவர் மோகன், அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் குழந்தையை வளர்க்க வழியின்றி கருவை கலைக்க முடிவு செய்தார். அதற்காக கெல்லீசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு யாஸ்மின் சென்றபோது, மருத்துவமனையில் பழக்கமான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயகீதா, வயிற்றில் உள்ள குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை அதிக பணத்திற்கு விற்று தருவதாகவும், தற்போது கருவை கலைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த வாரம் யாஸ்மினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. 24ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆனார்.

ஏற்கனவே திட்டமிட்டப்படி குழந்தையை விற்பனை செய்ய கடந்த 25ம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடை அருகே யாஸ்மின் வந்துள்ளார். சொன்னபடி ரூ.2.50 லட்சத்திற்கு இடைத்தரகர்களான எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தனம் மற்றும் ஜெயதீபா ஆகியோர் உதவியுடன் குழந்தையை விற்பனை செய்துள்ளார். பிறகு அன்று இரவே வேப்பேரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்ததார். அதில், குழந்தை விற்பனை செய்த ரூ.2.50 லட்சம் பணத்துடன் ஆட்டோவில் சென்றபோது புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் பைக்கில் வந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்து கொள்ளையடித்து சென்றதாக புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி போலீசார் குழந்தையை விற்பனை செய்ய புரோக்கராக செயல்பட்ட ஜெயகீதா, தனம், லதா, ஆரோக்கிய மேரி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஆரோக்கிய மேரி வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் ஸ்ரீதேவி தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், திருமணம் நடந்த 13 ஆண்டுகள் குழந்தை இல்லாததால் இந்த குழந்தையை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தனர். அதைதொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மூலகொத்தளத்தில் சிவக்குமார் மாமனார் வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர்.

இதற்கிடையே சிசிடிவி பதிவு மூலம் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்ற ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனக்கு மீட்டர் காசு ரூ.110 மட்டும் கொடுத்து சவாரியை முடித்து அனுப்பினர். மற்றபடி யாரும் ஆட்டோவை வழிமறித்து பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார். உடனே போலீசார் புகார் அளித்த யாஸ்மினிடம் பணம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது வழக்கில் திடீர் திருப்பமாக வேப்பேரி காவல் நிலையத்திற்கு ஜெகன் மற்றும் சந்தியா என்ற தம்பதி வந்து பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்றும் எங்களிடம் தான் யாஸ்மின் கொடுத்து வைத்திருந்தார் என்று விளக்கம் அளித்தனர்.

அப்போது தான் யாஸ்மின் காவல் நிலையத்தில் பணத்தை கொள்ளயைடித்து சென்றதாக பொய் புகார் அளித்தது அம்பலமாகியது. பின்னர் போலீசார் ஜெகன் மற்றும் சந்தியாவிடம் விசாரணை நடத்தினர். அதில், நாங்கள் சமூக வலைத்தளங்களில் குழந்தை விற்பனை செய்த பணத்தை யாரோ கொள்ளையடித்து சென்றதாக யாஸ்மின் காவல் நிலையத்தில் புகார் அளித்த விவரத்தை அறிந்தோம். அது உண்மையில்லை. யாஸ்மின் தனது குழந்தையை விற்பனை செய்த ரூ.2.50 லட்சத்தை எனக்கு போன் செய்து ஜீவா பார்க் அருகே வரவழைத்து கொடுத்தார். அடுத்த நாள் மாதவரம் அருகே யாஸ்மின் என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்ப வாங்கி கொண்டார். பிறகு, அவர் பணத்தை கொள்ளயைடித்ததாக புகார் அளித்துள்ளார். இதனால் தேவையில்லாமல் நாங்கள் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் நாங்களே சென்று விளக்கம் அளிக்கலாம் என்று காவல்நிலையத்தில் ஆஜரானோம் என தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் மீட்கப்பட்ட குழந்தையை அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை விற்பனை செய்துவிட்டு காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்து நாடகமாடிய யாஸ்மின், குழந்தையை விற்பனை செய்ய புரோக்கர்களாக செயல்பட்ட ஜெயகீதா, தனம் மற்றும் சட்டவிரோதமாக குழந்தையை விலைக்கு வாங்கிய சிவக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் செய்யது தஸ்தகீர், ஜெகன் மற்றும் சிவக்குமாரின் மனைவி ஸ்ரீதேவியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தை அமைந்தகரையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Tags : 4 arrested for selling baby for Rs 2.50 lakh: 2 arrested, including 2 female brokers
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...