தீபிகாவை ஒதுக்கிய மக்கள்

நன்றி குங்குமம் தோழி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தன் புதிய திரைப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பையின் முக்கிய இடங்களுக்குச் சென்றார். எப்போதும் தீபிகா என்றதும் ரசிகர்கள் ஓடி வந்து செல்ஃபி எடுப்பதும், வீடியோ எடுப்பதும் என்று அந்த இடமே திக்குமுக்காடிவிடும். ஆனால் இம்முறை ரசிகர்கள் அவரை கண்டும் காணாதது போல ஒதுங்கியே இருந்தனர்.

காரணம், தீபிகா இம்முறை தன் திரைப்படக் கதாபாத்திரமாகவே மாறி, நண்பர்களுடன் சூப்பர் மார்க்கெட், மால் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்கிறார். தீபிகா சமீபத்தில் நடித்து வெளியாகிய படம் சப்பாக். பதினைந்து வயதில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டெழுந்து இப்போது தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்குத் துணையாய் நிற்கும் லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை கதைதான் சப்பாக். இப்படத்தை தீபிகாவே தயாரிக்கிறார். மேகனா குல்சர் இயக்குகிறார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, உருவம் சிதைந்து அதனால் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நிராகரிப்புகளையும் பதிவு செய்ய சப்பாக் குழு முடிவு செய்தனர். அதன் பங்காக, இப்படம் வெளியாவதற்கு முன் சமூகத்தில் ஒரு சோதனை முயற்சி செய்ய திட்டமிட்டனர். தீபிகா தன் திரைப்படத்தின் பாத்திரமான, மால்தியாக (லக்‌ஷ்மி அகர்வாலாக) மாறி தெருவில் சென்றார். அவருடன் உண்மையிலேயே ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சில பெண்களும் இருந்தனர். மேலும் படக்குழுவினரும் காவலர்களும் பொது மக்களைப்போல, ரகசிய கேமராக்களுடன் பின் தொடர்ந்தனர்.

தீபிகாவும்  பாதிக்கப்பட்ட பெண்களும் பல்பொருள் அங்காடிக்குள் செல்கின்றனர். அங்கு காய்கறிகள், பொருட்கள் வாங்குகின்றனர். பல பேர் அவர்களை வினோதமாக பார்த்தும், அங்கிருந்து நகர்ந்தும் செல்ல, சிலர் மட்டும் சகஜமாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரிடம், மேல் அடுக்கில் இருக்கும் பொருளை எடுத்து தாருங்கள் என்கிறார். ஆனால் அந்த நபர், உடனே அங்கிருந்து நகர்ந்து போகிறார். இப்படி பலர் அவர்கள் கேட்கும் சின்ன உதவிகளை கூட உடனே மறுக்கின்றனர். இருப்பினும் சிலர், புன்சிரிப்புடன் உதவிகள் செய்து சகஜமாக இருக்கின்றனர்.

உண்மையில் அவர்களிடம் பேசுவது தீபிகாதான் என்று தெரியாமல் பலரும் இவர்களை ஏளனமாகவே நடத்துகின்றனர். இதையெல்லாம் படம் பிடித்து வீடியோ பதிவாக தீபிகா வெளியிட்டார். உடனே அது வைரலாகி டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று பல சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. ஏற்கனவே பல கொடுமையையும் வலியையும் அனுபவித்து, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் பெண்களை, சமூகம் எப்படி ஒரு சிறிய நிராகரிப்பால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்பதை இந்த வீடியோ பதிவு காண்பிக்கிறது. மக்களும் இதை ஆமோதித்து, சமூக மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக சப்பாக் இருக்கும் என்று நம்புகின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>