×

மழைநீர் சூழ்ந்ததால் வீட்டில் தவித்த கர்ப்பிணி உள்பட 7 பேர் மீட்பு

திருத்தணி: திருத்தணியில் தண்ணீர் நடுவே சிக்கிய கர்ப்பிணி உள்பட 7 பேரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். திருத்தணி பகுதிகளில் சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள ஏரி, குளங்களுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள் கொள்ளளவை எட்டிவிட்டதால் உபரிநீர் வெளியேறி வருகிறது. திருத்தணி-பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ள அமிர்தாபுரம் ஏரியும் நிரம்பிவிட்டது. இந்த ஏரியையொட்டியுள்ள திருவள்ளூர் நகரில் 2 பேர் வீடு கட்டியுள்ளனர்.

தற்போது பெய்துவரும் மழை மற்றும் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆகியவற்றதால் அந்த வீடுகளை தண்ணீர் சூழ்ந்துவிட்டது. இதனால் அந்த வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த மக்கள், திருத்தணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் அரசு தலைமையில் வீரர்கள் தவ்பிக் உள்பட பலர் விரைந்தனர். தண்ணீரில் ரப்பர் படகு மூலம் சென்று  அந்த வீடுகளில் தவித்த கர்ப்பிணி உள்பட 7 பேரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுத்தனர்.

Tags : rain
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...