'வெல்க தளபதி...வெல்க அண்ணன் உதயநிதி': நாடாளுமன்றத்தில் தமிழில் பதிவியேற்று கவனம் ஈர்த்த திமுக எம்.பி.க்கள்..!!

டெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.க்கள் 3 பேரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்.எம் அப்துல்லா, கனிமொழி மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளே மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது. முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியவுடன் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த முகமது அப்துல்லா, ராஜேஷ்குமார் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மூன்று பேருமே தமிழ் மொழியில் பதிவு ஏற்றுக்கொண்டனர். அச்சமயம் ராஜேஷ்குமார், பதவியேற்பு உறுதிமொழிக்கு பிறகு, வெல்க தளபதி.. வெல்க அண்ணன் உதயநிதி அவர்கள் என்று முடித்தார். இது குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: