×

கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு: சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  

தமிழகத்தில் தொடரும் வடகிழக்குப் பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மேலும், அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டதன் அடிப்படையில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது. அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்
அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று (29.11.2021) காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.டி.சி. குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்களை கேட்டறிந்து அவற்றை சரிசெய்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக வரதராஜபுரம் ஊராட்சி, வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் ஊராட்சிகுட்பட்ட பரத்வாஜ் நகர், பி.டி.சி குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக அதீத கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 4 அடி உயரத்திற்கு தேங்கியிருந்த மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மழைநீர் வடிந்து வருகிறது. மேலும், அப்பகுதிகளில் மழைநீரினால் பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் ஆகியோரை தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில பேரிடர் மேலாண்மை மையம், தீயணைப்பு மற்றும் காவல்துறை ஆகியோர் மூலமாக பைபர் படகுகளில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு,

அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேளை உணவும், தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போதுள்ள 25 முகாம்களில் சுமார் 930 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள் பரவா வண்ணம் மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் அதிக அளவு உள்ள பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் குடிநீரில் குளோரினேஷன் செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகறிது.

அதுமட்டுமின்றி மழைநீரால் கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க கொசு ஒழிப்பு மருந்து மற்றும் பிளிச்சிங் பவுடர் ஆகியவை தெளிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் வடகிழக்கு பருவமழை சார்ந்த புகார்களை தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம்
அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் ஊராட்சிக்குட்பட்ட அமுதம் நகர் பகுதியில் வெள்ளத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர், தாம்பரம் மாநகராட்சி, வானியன்குளம், இரும்புலியூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்த விவரங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட வருவதை அறிந்த முடிச்சூர், ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியையும் பார்வையிட வேண்டும் என்று வைத்த கோரிக்கையின்  அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட ஜோதி நகரையும் பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, பொதுமக்களிடம் தேவைப்படும் நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.  

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மிகவும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களை உள்ளடக்கிய 33 குழுக்களும், துணை ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் நிலையில்
8 வட்டங்களுக்கும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும், கனமழையால் அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகளான முடிச்சூர், தாம்பரம், இரும்புலியூர், கூடுவாஞ்சேரி, தாழம்பூர், பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 7 சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை சார்ந்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ்அப் மற்றும் இலவச தொலைபேசி எண்கள் விளம்பரப்படுத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 44 முகாம்களில் சுமார் 2,313 நபர்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.ஆர்.ராஜா, திரு. கு.செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பி.அமுதா, இ.ஆ.ப., டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான திரு.எல்.சுப்பிரமணியன்,இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


Tags : Kanchipura ,Sedalpattu ,Sri Lanka ,First Minister ,Q. ,Stalin , Kanchipuram and Chengalpattu districts affected by heavy rains: Chief Minister MK Stalin's order to expedite rehabilitation and relief work
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...