சசிகலாவை இணைத்துக் கொண்டிருந்தால் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்: அதிமுக-வின் இரட்டை தலைமைக்கு அன்வர் ராஜா எதிர்ப்பு..!!

சென்னை: அதிமுகவின் இரட்டை தலைமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா, சசிகலாவை மீண்டும் இணைத்துக் கொண்டிருந்தால் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியிருக்கிறார். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் அவர் போர்க்கொடி தூக்கி இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அன்வர் ராஜா கூறியதும், எடப்பாடி தொடர்பான அவரது கருத்தும் கடும் வாக்குவாதத்தில் முடிந்தது. இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், கட்சி தலைமை மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்விகளில் இருந்து அதிமுக எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி குறித்து விரிவான விவாதம் நடத்தப்படவில்லை என்று கூறியிருக்கும் அவர், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுகவுக்கு எந்த லாபமும் இல்லை; வாக்குகளை மட்டுமே இழந்ததாக தெரிவித்துள்ளார். சசிகலா தங்களுடன் இருந்திருந்தால் அதிமுக கூடுதலாக 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்றும் சசிகலாவின் வருகையும், பிரச்சாரமும் அதிமுக மீண்டும் ஒன்றாக இணைந்தது என்ற செய்தியை வெளிப்படுத்தி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவுக்குள் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற எனது கருத்தை 99 சதவீத கட்சி தொண்டர்கள் எதிரொலிப்பதாக அன்வர் ராஜா கூறியுள்ளார். கட்சி விவகாரத்தில் சசிகலாவின் குடும்பத்தினர் மீண்டும் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இரட்டை தலைமையால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒருமித்த கருத்து இல்லை என்று கூறியிருக்கிறார்.

கட்சியின் சின்னத்தை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இருவரும் விட்டு கொடுத்து செல்லும் போக்கை கடைபிடிப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் ஒன்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் அவர், கட்சி தொண்டர்களால் அத்தகைய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இரட்டை தலைமைக்கு எதிராகவும், ஒற்றை தலைமை தேவை என்றும் அன்வர் ராஜா கூறியுள்ள கருத்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: