×

பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியதால் மாணவிகள் அவதி-அதிகாரிகள் நடவடிக்கைக்கு பெற்றோர் கோரிக்கை

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர். அரசு அறிவிப்பின்றி விடுமுறை விடப்பட்டு வருகிறது. பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கொரானா பெருந்தொற்றால் கடந்த 2 வருடமாக பள்ளி இயங்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. மாணவர்களும் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர்.

சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பெய்ததால் அவ்வப்போது மழை காரணமாக மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் கன மழையால் பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்துள்ள நிலையில் மழைநீர் ஒழுகி அறை முழுவதும் தேங்கியுள்ளது.

இதனால், மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் 10, 12ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் தண்ணீர் தேங்காத வகுப்பறைகளில் பாடம் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மற்ற வகுப்பு மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை நிர்வாகம் உத்தரவின்றி பள்ளி நிர்வாகம் விடுமுறை எடுத்து கொள்ளும் படி அறிவுறுத்தியது. அதன்பேரில், கடந்த 2 வாரத்தில் மழை பெய்து கலெக்டர் விடுமுறை அளித்த நாட்களை தவிர்த்து சுமார் 5 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது.

ஏற்கனவே 2 வருடமாக பள்ளிக்கு வர முடியவில்லை என வருத்தத்தில் இருந்த மாணவிகள் இது முடிய எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற கவலையில் புலம்பியபடி உள்ளனர். எத்தனையோ பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். அதற்கு பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளன. 1200 மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பழைய காலத்து கட்டிடங்களே இன்றளவும் உள்ளன. எனவே,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கட்டிட பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallikonda Government Girls' High ,School , Pallikonda: Pallikonda Government Girls' High School students suffered due to stagnant water in the classroom. Government
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...