வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் ஓராண்டுக்கு பிறகு பெற்றோரை சந்திக்க சென்ற பெண்ணுக்கு பஸ்சில் ஆண் குழந்தை பிறந்தது-ஆம்பூர் அருகே நள்ளிரவில் பரபரப்பு

ஆம்பூர் : வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த இளம்பெண் ஓராண்டுக்கு பிறகு பெற்றோரை சந்திக்க சென்றபோது நள்ளிரவில் ஓடும் ஆம்னி பஸ்சில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய்க்கும், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ரயில் மூலம் ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ஒடிசா மாநிலம், லட்சுமிநாராயணா மாதிர் கிராமத்தை சேர்ந்தவர் கோகேஷ்மாலிக் மகன் சமீர்குமார்மாலிக்.

இவரது மனைவி சுக்ரியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சமீர்குமார் மாலிக்கும், சுக்ரியாவும் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசிக்க தொடங்கினர். அங்கு சமீர்குமார்மாலிக், ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், சுக்ரியா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது குறித்து ஒடிசாவில் உள்ள அவரது பெற்றோருக்கு சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சமாதானமடைந்த சுக்ரியாவின் பெற்றோர் சொந்த ஊருக்கு வரும்படி அழைத்தனர். இதனால், சமீர்குமார்மாலிக்கும், சுக்ரியாவும் ஒடிசாவுக்கு செல்ல கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் புறப்பட்டனர். நள்ளிரவு அந்த பஸ் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்தது.

அப்போது, சுக்ரியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி எழுந்தனர். இதையடுத்து பஸ்சில் இருந்த சில பெண்கள் சுக்ரியாவுக்கு உதவினர். இதில் பஸ்சிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து, பஸ்சில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சுக்ரியாவைவும், குழந்தையையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர்கள் ரயில் மூலம் சென்னை வழியாக ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவில் ஓடும் ஆம்னி பஸ்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: