×

பாலியல் தொல்லை வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற கோரியும், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்றக்கோரியும், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை கோரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை பாரபட்சமாக இருக்கிறது. எனக்கு எதிரான விவகாரத்தில் ஊடகங்களே விசாரணை நடத்தி தன்னை குற்றவாளி போன்ற பின்பத்தை உருவாக்கியுள்ளது. இதனால்  விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு தன் மீது தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் மெதுவாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது திடீரென வேகம் காட்டப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் வைத்து பார்க்கும் போது தமிழ்நாட்டில் இந்த விசாரணை நடைபெற்றால் சரியான நீதி கிடைக்காது என்று தோன்றுகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதுமட்டுமின்றி தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொடர்பான வழக்கின் விசாரணைகளுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி யு.வி. லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ் தாஸ் தலைமையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு மாற்று வேண்டும் எனவும், விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், ஏற்கனவே இந்த வழக்கை பொறுத்தவரை விசாரணை என்பது சரியான போக்கில் தான் சென்று கொண்டிருக்கிறது. வேறு மாநிலத்திற்கு மாற்றக்கூடாது என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தமிழகத்திலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : D. G. ,Supreme Court ,Rajesh Das , Sex, DGP Rajesh Das, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...