×

உப்பாற்றில் வரும் வெள்ளத்தால் செய்களத்தூர் கண்மாய் உடையும் அபாயம்-தேவகோட்டையில் தரைப்பாலத்தை தாண்டி செல்லும் தண்ணீர்

மானாமதுரை/தேவகோட்டை : மானாமதுரை அருகே உப்பாற்றில் வரும் வெள்ளநீர் ஏற்கனவே நிரம்பியுள்ள செய்களத்தூர் கண்மாய்க்கு பாய்வதால் செய்களத்தூர் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக உப்பாற்று நீரை வேறுபக்கம் திருப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை ஊரா ட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலூர் கிராமத்தில் உப்பாறு உள்ளது. மழை வெள்ளகாலங்களில் அங்குள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து வெள்ளநீர் இந்த ஆற்றில் ஒன்றாகி செய்களத்தூர் மஞ்சிக்குளம், சந்திரனேந்தல், புளிச்சிகுளம், செய்களத்நூர் பெரிய கண்மாய், சின்னக்கண்மாய், கல்குறிச்சி கண்மாய்களை நிரப்பி வேதியரேந்தல் அருகே உள்ள பூக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம கண்மாய்களை நிரப்பி செல்லும்.

இந்த முறை வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால் உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அதன்கரைகளை உடைத்து செய்களத்தூர் பெரியகண்மாய்க்கு பாய்கிறது. ஏற்கனவே கனமழையால் நிரம்பியுள்ள செய்களத்தூர் கண்மாயில் தண்ணீர் மட்டம் உயர்வதால் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் வேலூர் உப்பாற்று வரத்துக்கால்வாய் தூர்வாரப்படவில்லை. கரைகள் பலமிழந்து இருந்ததால் அதிக வெள்ளநீர் வரத்து காரணமாக கரைகள் உடைந்து செய்களத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாய் உடைந்தால் அருகில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே பொதுப்பணித்துறையினர் விரைந்து செயல்பட்டு நீரை வேறுபக்கம் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதேபோல் தேவகோட்டை மணிமுத்தாற்றில் தற்போது வெள்ளம் சென்றுகொண்டு இருக்கிறது. கடந்த இருபது வருடங்களுக்கு பின்னர் தற்போதைய மழையில் தான் ஆற்றில் தண்ணீரை பார்க்க முடிகிறது. தேவகோட்டையில் இருந்து மாரிச்சான்பட்டி செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் மேலே தண்ணீர் செல்கிறது. இதனைத்தொடர்ந்து பாலத்தின் இரண்டு நுழைவு வாயில்களையும் தேவகோட்டை டவுன்போலீசார் தடுப்பு வைத்து அடைத்தனர். போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தேவகோட்டையில் இருந்து மாரிச்சான்பட்டி, கோட்டூர், நயினார்வயல், பெரியகாரை வழியாக உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்கள் சருகணி சாலை வழியாக மட்டுமே தேவகோட்டைக்கு வர முடியும். மேலும், தண்ணீர் செல்லும் பாதையான அணைக்கட்டு பகுதி முழுவதும் கருவேல மரங்கள் அடர்த்தியாக படர்ந்திருப்பதால் தண்ணீர் இலகுவாக செல்வதில் தடையாக இருக்கிறது. மேலும் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் மணல் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்திருக்கிறது. அதிகாரிகள் உடனடியாக கவனித்து சரிசெய்யாவிடில் பாலம் சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Tags : Seykalathur ,Devakottai , Manamadurai / Devakottai: Seykalathur near Manamadurai is flooded due to floodwaters.
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்