பாலியல் தொல்லை வழக்கு!: சுஷீல்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை..!!

சென்னை: சுஷீல்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேளம்பாக்கத்தில் உள்ள சுஷீல்ஹரி இன்டர்நெஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது பல்வேறு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் மீது அடுத்தடுத்ததாக போக்சோ வழக்குகள் பாய்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியிலும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணியிலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் பாபா மட்டுமே பயன்படுத்தும் பள்ளியின் ரகசிய அறை என்பது தற்போது வரை திறக்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து அவருடைய ரகசிய அறையை போலீசார் திறந்துள்ளனர்.

இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாணவிகள் இந்த ரகசிய அறையிலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதாக புகார் மூலம் தெரிவித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் ரகசிய அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: