திருப்பதியில் பாபவிநாசம், ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதைகள் மூடல்: மழையால் பழமையான கட்டிடங்கள் இடியும் அபாயம்

திருமலை: திருப்பதியில் பழமையான வீடு இடிந்த நிலையில், மேலும் 161 வீடுகள் இடியும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி திருமலையில் பாபவிநாசம், ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் அர்ச்சகராக உள்ள  சீனிவாசுலுவுக்கு திருப்பதி பவானி நகரில் 60 ஆண்டுகள் பழமையான வீடு இருந்தது. இந்த வீட்டில் வசித்து வந்த சீனிவாசுலு குடும்பத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு காலி செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் இந்த பழமையான வீடு சிதிலமடைந்தது. இந்த வீடு நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் திருப்பதி டவுன் பிளானிங் அதிகாரிகள் திருப்பதியில் உள்ள இசக்க வீதி, பண்ல வீதி, கோவிந்தராஜ சுவாமி கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் 161 பழமையான வீடுகள் எப்போது வேண்டுமென்றாலும் இடிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டு அந்த வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். விரைவில் அந்த வீட்டில் உள்ளவர்களை காலி செய்ய வைத்து இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அந்தமான் அருகே ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவெடுத்த நிலையில் தொடர்ந்து சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபவிநாசம் மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதைக்கு பக்தர்கள் செல்லும் பாதைகளை மூடி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More