ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்: தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின

ராமநாதபுரம்: கனமழையால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் வெள்ளமாக சூழ்ந்து நிற்கிறது. ஆற்றுப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி முதல் தொடர்மழை பெய்து  வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது.  அதிகபட்சமாக பாம்பனில் 114.20 மிமீ, மண்டபத்தில் 113.20 மிமீ மழை  பதிவானது. இதனால் குடியிருப்புகளை மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. குறிப்பாக, பாம்பனில் உள்ள சின்னப்பாலம்  மற்றும் தோப்புக்காடு பகுதிகளிலும், மண்டபம் மற்றும் தங்கச்சிமடத்தில்  உள்ள ராஜா நகர் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. தண்ணீர் வடியாததால் மக்கள், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். பாம்பனில் திடீரென கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுபட்டு கடலில்  மூழ்கின. பரமக்குடி: தொடர்மழையால் பரமக்குடி வைகை ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி - எமனேஸ்வரத்தை இணைக்கும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொண்டி: இதேபோல் திருவாடானை  பாகனூர் அருகே விருசுளி ஆற்றில் தோமையார்புரம் - மெக்கவயல் இடையே உள்ள தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. இதில் ஆபத்தை உணராமல் கயிற்றை பிடித்தபடி மக்கள் கடந்து சென்றனர்.

பஸ்நிறுத்தம் இடிப்பு: கடலூர் குண்டுசாலை-ஆல்பேட்டை சாலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. ஆட்சியரகம் எதிரே பஸ் நிறுத்தம் அமைக்க இடம் வசதி இல்லாததால் தென்பெண்ணை ஆற்றின் கரையில் கடந்த அதிமுக ஆட்சியில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பஸ் நிறுத்தம் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கியவாறு இருந்தது. மேலும், சாலைப் பகுதியிலும் விரிசல் காணப்பட்டது. இதையடுத்து பஸ் நிறுத்தம் பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீருக்குள் தள்ளி விடும் வகையில் இடித்து அகற்றப்பட்டது.குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறில் 2 மணி நேரத்தில் 73 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

ஆற்றுநீரை உள்வாங்கும் அதிசய கிணறு

நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. இதே போல் திசையன்விளை அடுத்த ஆயன்குளம் படுகை நிரம்பியதோடு அருகேயுள்ள இரு கிணற்றுக்குள் தண்ணீர் செல்கிறது. மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு தண்ணீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும், இதுவரை கிணறு நிரம்பியது கிடையாது. இக்கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் பூமியினுள் உள்வாங்குவதால் சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதாகவும், உப்புத் தண்ணீர், நல்ல தண்ணீராக மாறுவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

குற்றால அருவிகளில் 1992 போல வெள்ளப்பெருக்கு

தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று மதியத்திற்குப் பிறகு பலத்த மழை பெய்ததாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாகவும் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாலத்தையும் தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. சிறிது நேரத்தில் வெள்ளநீர் ஆற்றையும் கடந்து குற்றாலநாதர் கோயில் பிரகாரம் மற்றும் சன்னதி பஜாரில் புகுந்தது. கோயிலில் புகுந்த வெள்ள நீரை அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் இறைத்து வெளியேற்றினர்.

ஐயப்ப பக்தர்கள் வருகையை முன்னிட்டு தற்போது சன்னதி பஜார் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் வெள்ள நீர் புகுந்து பஜார் முழுவதும் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளும் ஒன்றாக இணைந்து ஒரே பிரிவாக ஆக்ரோஷமாக விழுந்தது. பழைய குற்றாலத்தில் தண்ணீர் படிக்கட்டுகள் வழியாக கரைபுரண்டு ஓடியது. புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடந்த 1992ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை நினைவூட்டுவதாக இருந்தது.

Related Stories:

More