×

கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்வதை தடுக்க அடையாறு ஆற்றை ஆழப்படுத்த முடிவு: அமுதா ஐஏஎஸ் தகவல்

தாம்பரம்: தாம்பரம் அருகே தொடர் மழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ள வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை, மீட்பு பணி சிறப்பு அதிகாரி அமுதா ஐஏஎஸ், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். பின்னர் அமுதா ஐஏஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

மழை குறைந்திருந்தாலும் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறி கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ளது. அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற முன்னரே எச்சரிக்கை விடுத்து, அவர்களை மீட்டு பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் என பாதுகாப்பாக தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம்.

அடையாறு ஆறு அகலமும், ஆழமும் குறைவாக உள்ளதால், அதை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.  இந்த கோரிக்கையை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தொகையை பெற்று அடையாறு ஆறு முழுவதும் எங்கெங்கெல்லாம் ஆழம் மற்றும் ஆற்றின் அகலம் குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் ஆழப்படுத்தி, அகலப்படுத்தி மீண்டும் மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடையாறு ஆற்றில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டது. ஆனால், அது போதாது. ஆற்றில் எங்கெல்லாம் குறுகி இருக்கிறதோ அங்கு ஆற்றை அகலப்படுத்துவது, அடையாறு ஆற்றைப் போலவே தண்ணீர் செல்ல ஒரு தனி வழி உருவாக்கி அடையாறு கால்வாய் 1, அடையாறு கால்வாய் 2 என்று உருவாக்கினால் மட்டுமே அனைத்து தண்ணீரையும் கொண்டு செல்ல முடியும். எனவே அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். வரதராஜபுரம், ஆதனூர், முடிச்சூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக இரும்புலியூர், பீர்க்கன்காரணை மற்றும் விடுபட்ட பகுதிகளிலும் கட் அண்ட் கவர் கால்வாய் பணிகள் தொடங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Adyar River ,Amutha , Coastal area, house, flood, decided to deepen Adyar river, Amutha IAS
× RELATED குஷ்பு மீது காவல் நிலையத்தில் புகார்