×

சென்னையில் 482 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னையில் 482 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதாவது: பரமக்குடியில் 224 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் புதிதாக பயிர்கள் சேதம் அடைந்திருப்பதை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 228 இடங்களில் அதிக திறன் கொண்ட பம்புசெட்கள் மூலம் நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 188 முகாம்களில் 15,016 பேரும், சென்னையில் மட்டும் 7 நிவாரண முகாம்களில் 1048 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு 98,350 உணவு பொட்டலங்கள் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். 284 கால்நடைகள் இறந்துள்ளன. 1814 குடிசைகள் இடிந்துள்ளன. 319 வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னையில் 482 பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதில் 111 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புசெட்கள் மூலம் நீர் வெளியேற்றும் பணி நடக்கிறது. அதற்காக 46 பொக்லைன் இயந்திரங்களும், 820 பம்புசெட்களும், 54 மீட்பு படகுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : Chennai ,Minister ,KKSSR Ramachandran , Collector instructs to expedite relief work in 482 areas in Chennai: Minister KKSSR Ramachandran Interview
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி