ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துக: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியதாகவும், நோய் எதிப்பு ஆற்றலை விரைந்து குறைக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஓமிக்ரான் தொற்று பரவ தொடங்கினால் அதன் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கவனிப்பது அவசியம் என்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது வரை தமிழ்நாட்டில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். எனினும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனை எதிர்கொள்ள மாநில நல்வாழ்வுத்துறை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: