மழை, வெள்ளப் பாதிப்பு; திமுகவினர், அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மக்களை இன்னலின்றி காப்பாற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுகவினர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்; இந்த இடர்மிகு சூழலில், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் கழகத்தினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வரும் செய்திகள் எனக்கு வந்து கொண்டிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உணவு கிடைப்பதில் எவ்வித சிரமங்களும் நேராமல் இருக்க, அமைச்சர்கள், கழக மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் ஏழை எளிய மக்களின் உணவு மற்றும் உடைமைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னணியில் நின்று செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வரலாறு காணாத பெருமழைக் காலத்திலும், கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் ஆகும். எனக்கு மகிழ்ச்சியளிப்பதும் அதுதான். ஆகவே, கட்சியினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து நின்று பணியாற்றி, மக்களை இன்னலின்றிக் காப்பாற்றிட உழைத்திடுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: