திருவேற்காடு, பூந்தமல்லியில் ஆய்வு; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பூந்தமல்லி: திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகரில், நேற்றிரவு கூவம் நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. அங்கு வீடுகளில் சிக்கியிருந்த மக்களை நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு, அங்குள்ள தனியார் பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களை சந்தித்து, பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் கோயில் தெருவில் மழைநீர் சூழ்ந்த பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்புகள் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கினார்.

மேலும், மேற்கண்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பூவை ஜெயக்குமார், நகராட்சி ஆணையர்கள் ரமேஷ், நாராயணன், நகர செயலாளர் என்இகே.மூர்த்தி, ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: