×

தஞ்சை அண்ணா சாலை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனப்படுத்தப்படுகிறது: கடைக்காரர்களுக்கு மாற்று இடம் கொடுக்க மாநகராட்சி முடிவு

தஞ்சை: தஞ்சாவூர் அண்ணா சாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாடு செய்வதை முன்னிட்டு பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் பெயரில் உள்ள கடைதாரர்களுக்கு மாற்று ஏற்பாடாக சரபோஜி சந்தையில் கடைகள் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மழைக்காலங்களில் தஞ்சை பெரிய கோயில், ராஜராஜ சோழன் சிலை பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலை வழியாக கீழவாசல் மார்க்கெட், அண்ணாசாலை, வழியாக சென்று ஜுபிடர் தியேட்டர் அருகில் உள்ள வாய்க்காலில் சேர்ந்து அகழியை சென்றடையும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நாளடைவில் அண்ணாசாலை மழைநீர் வடிகால் மீது கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் மழைக்காலங்களில் ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் மழை நீர் வடிகால் மீது அமைக்கப்பட்ட கடை மற்றும் கட்டிடங்களை அப்புறப்படுத்திக் கொள்ள கடைக்காரர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. கடைக்காரர்கள் பெயரில் எழுப்பப்பட்டிருந்த கேட்பினையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த பின் கடைகளை காலி செய்வதாக உறுதி அளித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையை முன்னிட்டு மாநகரில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு வருகிறது. அண்ணாசாலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அகலப்படுத்தப்பட்டு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு கருதி பர்மா பஜார் கடைகளில் மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே தாயகம் திரும்பியோர் பெயரில் கடை நடத்தி வந்த கடைக்காரர்களுக்கு அருகிலுள்ள சரபோஜி சந்தையில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்தகவல் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjai Anna Road ,Municipal , Tanjore, Smart City Project
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ