உடுமலை-ஆனைமலை சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர்: வடிகால் வசதி செய்து தர கோரிக்கை

உடுமலை:  உடுமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மாற்று வழி பாதையான உடுமலை- ஆனைமலை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ் வழித்தடத்தில் உள்ள கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி இல்லாததால் பருவமழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நீடித்த கனமழை காரணமாக கரட்டுமடம் சாலை தெப்பம் போல உருமாறியது. சாலையில் தேங்கிய தண்ணீர் அருகில் இருந்த குடிசைகளுக்கு புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரட்டுமடம் பகுதியில் சாலையோர வடிகால் வசதி செய்து கொடுத்தால் மலை காலங்களின்போது சாலைகளில் தண்ணீர் தேங்காது. தொடர் மழையால் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாவது உடன் துர்நாற்றம் வீசி வருவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நீடிப்பதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இனி வரும் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: