×

சுக்கி ஹப்பா கர்நாடக பொங்கல்

நன்றி குங்குமம் தோழி

உலகம் முழுவதும் உள்ள உழவர்கள் அனைவருக்கும்  மகிழ்ச்சியான நாள் என்றால், அது அறுவடை நாளாகத்தான் இருக்கும். பட்டம் பார்த்து விதைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு, இரவு, பகலாய் மாதக்கணக்கில் பாதுகாத்து, நிலத்தில் விளைந்த அறுவடையை வீட்டுக்குக் கொண்டுவரும் நாளல்லவா அது. இந்த நாள் தமிழகத்தில் பொங்கல் என்ற பெயரில் உற்சாகமாகக் கொண்டாடப்படுவதை
கர்நாடகத்தில் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

தமிழ் மொழிக்கும், கன்னட மொழிக்கும் நெருங்கிய உறவும், நீண்ட தொடர்பும் இருப்பதை மொழியியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதேபோல, கலை, இலக்கிய, பண்பாட்டு, வாழ்க்கை முறை, நிலவியல் உள்ளிட்ட அம்சங்களிலும், அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கும், தமிழகத்துக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. காவிரியில் செழித்த தமிழகத்தைப் போலவே, இங்கும் அறுவடைத் திருநாள் அதிபிரசித்தம். அறுவடை முடிந்து, தை முதல் நாள் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படுவதைப் போலவே, கன்னட நாட்டிலும் ஆண்டின் முதல் நாள் ‘மகர சங்கராந்தி’ திருநாள் கொண்டாடப்படுகிறது.

வடஇந்திய பாணியில் ‘மகர சங்கராந்தி’ எனப் பொதுவாக அறியப்பட்டாலும், இத்திருவிழாவை, ‘சுக்கி ஹப்பா’ (அறுவடைத்திருநாள்) என்றே கன்னட உழவர்கள் அழைக்கிறார்கள். கர்நாடகத்தின் மற்ற பகுதிகளில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை விடப் பழைய மைசூரு மாகாணப் பகுதிகளில், கிராமிய மனத்தோடு கொண்டாடப்படும் ‘சுக்கி ஹப்பா’ வண்ணமயமானது. ‘சுக்கி ஹப்பா’ நாளன்று கன்னடர்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, முதற் வேலையாக குடும்பத்துடன சூரியனை வணங்குவார்கள். பின் அறுவடை செய்த புது நெல், புது கேழ்வரகு, கரும்பு உள்ளிட்ட வேளாண் பொருட்களை களத்தில் குவித்துப் பூஜை செய்து வழிபடுவர்.

பாரம்பரியமான ‘எள்ளொ பெல்லா’ (எள் வெல்லம்) என்னும் தின்பண்டத்தை தயாரிப்பர். இது வெள்ளை எள் உருண்டை, நிலக்கடலை, காய்ந்த தேங்காய்த்துண்டு, அச்சு வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து செய்யப்படுகிறது. இந்த எள் வெல்லத்துடன் சர்க்கரைப் பாகில் செய்யப்பட்ட அச்சு இனிப்பு வகை, வாழைப்பழம், ஒரு துண்டு கரும்பு ஆகியவற்றை கூடையில் போட்டு, அனைவருக்கும் வழங்குவது வழக்கம். பின்னர், பெரியவர்கள் காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்குவதை, ‘எள்ளு பிரோது’ (எள் வாழ்த்து என்கிறார்கள்). அன்றைய நாளில் வெல்ல உணவைத் தின்று, நல்லதைப் பேசிக்கொண்டிருந்தால், ஆண்டு முழுவதும் நல்லதே நடக்கும் என்பது கன்னடர்களின் நம்பிக்கை.

அன்று புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கல், பூசணிக்காயில் செய்யப்படும் இனிப்பு வகைகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றைச் சுவையாக சமைத்து, முன்னோர்கட்குப் படைப்பர்; பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள உறவுகளுக்குத் தந்து, தாங்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடுவார்கள்.
அப்போது கன்னட நாட்டின் பாரம்பரிய ‘சுக்கி குனிதா’ எனும் நாட்டுப்புற இசை நடனம் நடத்தப்படும். இந்த நடனத்தின்போது, கிராமியக்கலைஞர்கள் வண்ணமயமான ஒப்பனை செய்துகொண்டு, மஞ்சள், சிவப்பு வண்ண உடைகள் அணிந்து, ‘சுக்கி ஹப்பா’ பாடலைப் பாடி மகிழ்வர்; வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தெருக்களில் அரங்கேறும் பலவித போட்டிகளாலும், விருந்தினர்களின் வருகையாளும் ஊரே களை கட்டும்.

பின்னர், மாலையில் ஆண்டு முழுவதும் வீட்டுக்காக உழைத்த மாடுகளைக் கவுரவிக்கும் சடங்கு தொடங்கும். மாடுகளை நீராட்டி, வண்ணங்களால் அலங்கரித்து வண்ண உடைகள் உடுத்தி, மாலை அணிவித்துத் தீபம் காட்டுவர். பின், மேளம் முழங்க, மணி அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வலம் வருவர்; இதில், மற்றவர்களின் மாட்டை விடத் தங்களது மாடு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கடும் போட்டி நிலவும். இந்தப் போட்டியின் ஓர் அங்கமாகக் கோயில் வாசலில், தீ மூட்டி அதில் எருதுகளை விரட்டி, நெருப்பைத் தாண்டச் செய்வார்கள். மகர சங்கராந்தி நாளன்று நன்றி பிறந்ததாக நம்பப்படுவதால், இந்த விளையாட்டு உற்சாகம் ஆக நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுப் போன்ற விளையாட்டுகள்போல, கன்னட நாட்டில் நடக்கும் இந்த எருது விரட்டல் (கிச்சி ஹொய்சது) விளையாட்டுப் போட்டியைக் காண, ஏராளமான மக்கள் கூடுவார்கள். இறுதியாக, வீட்டில் அகல் விளக்கேற்றி, கடவுளுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் நன்றி தெரிவித்தவாறு, கன்னட நாட்டில் ‘சுக்கி ஹப்பா’ சுபம் பெறும்.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Suki Hapa Karnataka Pongal ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!