குளிர்கால தொடர் நாளை தொடங்கும் நிலையில் பரபரப்பு காங்.குடன் இணைந்து செயல்பட மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு

கொல்கத்தா: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் திடீரென கூறியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வந்தன. கடைசியாக நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கடும் நெருக்கடி கொடுத்தன.

அதே சமயம், அடுத்த மக்களவை தேர்தலுக்காக பாஜ.வுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்தார். இதற்கிடையே, திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியினர் சிலர் அடுத்தடுத்து திரிணாமுலில் சேர்ந்தனர். காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் மம்தா குரல் கொடுக்கத் துவங்கினார். இதனால், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான உறவில் விரிசல் விழுந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட தங்களுக்கு விருப்பமில்லை என திரிணாமுல் காங்கிரஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக ஆலோசிக்க, காங்கிரஸ் தலைமையில் நாளை காலை எதிர்க்கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். இது தொடர்பாக காங்கிரசின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அனைத்து எதிர்க்கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத்தில் காங்கிரசுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு விரும்பமில்லை.

எனவே, வரும் 29ம் தேதி (நாளை) காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர்கள் முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். பிறகு மற்றவர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். பாஜவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்கு போதுமான உறுதி இல்லை. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னை குறித்து குரல் எழுப்புவதில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்,’’ என்றார். இதற்கிடையே, நாளை காலை கொல்கத்தாவில் தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மம்தா தலைமையில் நடக்க உள்ளது.

Related Stories:

More